மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்து ஒரு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன்பிறகு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக ரூ.100 வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிக நேரம் பயணிகள் நிற்க முடியாது. மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மணிக்கு ரூ.10 வீதம் அபராதம் விதிக்கப்படும். பலருக்கு இந்த விவரம் தெரியாமல் ரயில் நிலையங்களில் சுற்றி திரிகிறார்கள்.
பிளாட்பாரத்தில் மிகுந்த நேரம் நிற்க கூடாது. ஒரு ரயிலை தவறவிட்டால் அடுத்த 10 நிமிடத்தில் வரும் மற்றொரு ரயிலில் ஏறி செல்ல வேண்டும்.
தேவையில்லாமல் அங்கு நின்றால் கண்காணிப்பு கேமரா காட்டி கொடுத்து விடும். கட்டுப்பாட்டு அறையில் இருந்து சுற்றித்திரியும் பயணிகள் குறித்த தகவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். மெட்ரோ ரயிலில் சிலர் ஒரு சில தவறுகளை தெரியாமல் செய்து விடுகின்றனர்.
ஒருமுறை பயணமாக எடுக்கப்படும் டோக்கனை பெற்றுக் கொண்டு அந்த இடத்திற்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வருகிறார்கள். இது தவறான செயலாகும்.
அந்த டோக்கனை ஒருமுறைக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியவை. அதன்பிறகு வெளியே செல்லும்போது ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். ஆனால் ஒரு சிலர் மீண்டும் அதே டோக்கனில் பயணம் செய்து அபராதம் செலுத்தும் நிலை உள்ளது. அதை தவிர்க்க வேண்டும் என்றும் மெட்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை செல்லும் ரூ.40–க்கான டோக்கன் பெற்றுக் கொண்டு பயணம் செய்யும் ஒருவர் ஆலந்தூரில் இறங்கி வெளியே செல்ல வேண்டும். ஆனால் ஒரு சில பயணிகள் மீண்டும் அதே டோக்கனில் கோயம்பேடுக்கு திரும்புகிறார்கள்.
ஒரு முறை பயணத்திற்கு எடுத்த டோக்கனை மீண்டும் திரும்புவதற்கு பயன்படுத்த முடியாது. அப்படி பயணம் செய்து தினமும் 100–க்கும் மேற்பட்ட பயணிகள் அபராதம் செலுத்துகின்றனர்.
மேலும் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் செல்ல டிக்கெட் பெற்ற ஒருவர் பயணம் செய்யாமல் கோயம்பேடு நிலையத்தில் 20 நிமிடத்திற்கு மேலாக இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும்.
பயணம் செய்யாமல் ஒருவர் 20 நிமிடங்கள் மட்டுமே ரயில் நிலையத்தில் நிற்க அனுமதி உண்டு. அதன் பிறகு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.10 வீதம் அபராதம் விதிக்கப்படும்