பாமரர்களுக்கும் இசையை தந்தவர் எம்எஸ்வி: விஜயகாந்த்

பாமரர்களும் இசையை ரசிக்க வைத்தவர் எம்.எஸ்.வி என தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்த் திரையுலகில் வரலாறு படைத்து, மேற்கத்திய இசையை தமிழ் இசையுடன் கலந்து, திரைப்படங்களின் வெற்றிக்கு பெரும்பங்காற்றியவர், பல்வேறு மொழிப்படங்களுக்கும் இசையமைத்தவர். 

பாமரர்களும் இசையை விரும்பிக் கேட்கவைத்த இசையுலகின் மாமேதை, சுமார் அறுபது வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பயணம்செய்து 1200 படங்களுக்குமேல் இசையமைத்து, கலைமாமணி, இசைப்பேரறிஞர், வாழ்நாள் சாதனையாளர் போன்ற பல விருதுகளைப்பெற்றவர். 

இசையமைப்பாளராக, பாடகராக, நடிகராக திரையுலகில் முத்திரை பதித்தவர் “மெல்லிசை மன்னர்” எம்.எஸ்.விஸ்வநாதன். 

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைத்த பெருமையும் இவரையேச் சாரும். இவ்வளவு பெருமைகளை பெற்றவர் உடல்நலக்குறைவால் இன்று (14.07.2015) அதிகாலை இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். 

அவரது இழப்பு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். தமிழ்த்திரையுலகம் உள்ளவரை அவரது நினைவும், புகழும், பெருமையும் என்றென்றும் நிலைத்துநிற்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. 

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், 

 அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings