காஸ் மானியம் போல ரேஷன் பொருட்களுக்கும் நேரடி மானிய திட்டம்

காஸ் சிலிண்டருக்கான மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படுவதுபோல, அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களுக்கான மானியத்தையும் நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 
முதல்கட்டமாக புதுச்சேரி, சண்டிகர், தாத்ரா - நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களில் செப்டம்பர் மாதம் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. அடுத்து படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலமாக மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை மத்திய நிதி அமைச்சக இணைச் செயலாளர் பியூஷ் குமார் டெல்லியில் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: ரேஷன் பொருட்களுக்கான மானியத்தை அதன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

முதல்கட்டமாக 3 யூனியன் பிரதேசங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்து படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். இதன்படி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.500 முதல் ரூ.700 வரை மானியம் கிடைக்கும். 

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர் களின் விவரத்தை மின்னணு முறையில் தர வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு டிசம்பர் மாதம் வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் உரியவர்களுக்கு மட்டும் மானியம் கிடைக்கும். இப்போது நடைமுறையில் உள்ள முறைகேடுகள் தடுக்கப்படும். மேலும் 13 கோடி பேர் பொது விநியோக திட்டத்தின்கீழ் பயனடைய வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இது தவிர ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க டிஜிட்டல் வடிவிலான நவீன ரேஷன் கார்டுகளை வழங்கவும் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரேஷன் கார்டுகளையும் டிஜிட்டல் கார்டுகளாக மாற்ற வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட் டுள்ளது. 

அரசு வழங்கும் மானியத் தொகை உரிய மக்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி முதல் கட்டமாக காஸ் சிலிண்டருக்கான மானியத்தை மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 

இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத் தப்பட்டதுடன், முறைகேடாக காஸ் இணைப்பு வைத்திருந்தவர்கள் அதனை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால் அரசுக்கு பெருமளவு மானியத்தொகை மிச்சமானது. மானிய விலையில் காஸ் சிலிண்டர் வாங்கப்படுவது 25 சதவீதம் குறைந்தது. 

இதையடுத்து அடுத்த கட்டமாக ரேஷன் பொருட்களுக்கு நேரடி மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலமாகவும் மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் இத்திட்டத்துக்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏனெனில் மக்களுக்கு பணத்தை நேரடியாக கொடுப்பதன் மூலம் மாநில அரசுகளுக்கு செல்வாக்கு இல்லாத நிலை ஏற்படும். ஆனால் மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது. 
Tags:
Privacy and cookie settings