எனது கணவர் ஒரு உயிரைக் கொடுத்து பல உயிர்களை காப்பாற்றி யிருக்கிறார் என்று ’ஹெல்மெட் கட்டாயம்’ என்ற நீதிமன்ற தீர்ப்பிற்கு காரணமான சென்னையை சேர்ந்த மல்லிகா தெரிவித் துள்ளார்.
கடந்த 2-5-2011 அன்று விருகம் பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த போது வேன் மோதியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவ மனையில் 3 நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்.குமார் (30).
இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீள முடி யாமல் தவிக்கிறார் இவரது மனைவி மல்லிகா.
இந்நிலையில் மல்லிகா தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், இது ஒரு முக்கியமான தீர்ப்பு தான். எனது கணவர் ஹெல்மெட் போடாமல் போனதால்தான் இன்று நான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நாங்கள் காதலித்து ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் செய்து கொண்டோம். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு.
நூறு வருடம் வாழ வேண்டிய வாழ்க்கை நாலு வருடத்தோட முடிந்துவிட்டது.
இன்று என் குழந்தை அனாதையாக நிற்கிறாள். வாழ்க்கையில் அவளுக்கு என்னால எல்லாம் வாங்கிக் கொடுக்க முடியும்.
அப்பா என்கிற அந்த உறவை மட்டும் வாங்கிக் கொடுக்க முடியாது, இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. என் மகள் அப்பாவைப் பற்றி கேட்கும்போது, இப்போதைக்கு அப்பா சாமிகிட்ட போயிருக்கிறார்.
உனக்கு எது வேண்டும் என்றாலும் என்னைக் கேளு, என் மூலமாக அவர் உனக்கு செய்வார் என்று சொல்லி சமாளிக்கிறேன். சட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கண்டிப்பாக ஹெல்மெட் போட்டு உங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்.
எனக்கு நடந்த கெட்டதிலும் நல்லது நடந்திருக்கிறது. அவர் ஒருத்தர் உயிரைக் கொடுத்து, எல்லோருடைய உயிரையும் காப்பாற்றியுள்ளார். அந்த பெருமை அவருக்குதான் போகும்.
மேலும், ஹெல்மெட் போட்டிருந்தால் அவர் உயிர் தப்பியிருக்கலாம். இந்த வடு நான் சாகும் வரை என் மனதில் இருக்கத்தான் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.