டாஸ்மாக் கடையை மாற்ற கோரி கலெக்டர் அலுவலகத்திற்குள் ஒப்பாரி !

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் அமர்ந்து திடீரென ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் கடையை மாற்ற கோரி கலெக்டர் அலுவலகத்திற்குள் ஒப்பாரி !

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்து கொண்டிருந்தது. 


இந்நிலையில் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும் என்று திரண்டு வந்திருந்தனர்.

இவர்களை மறித்த போலீசார் 4 பேரை மட்டுமே உள்ளே அனுப்பினர். உள்ளே நுழைந்த 4 பேரும் அலுவலக மையப்பகுதியில் திடீரென அமர்ந்து ஒப்பாரி வைத்து அழத் துவங்கினர்.

ஏற்கனவே உள்பகுதியில் காத்திருந்த பெண்களும் அவர்களைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர். 

பின்பு ஒருவரின் தோளில் மற்றவர்கள் கைபோட்ட படி தலையில் முக்காடிட்டு கலைந்த தலையுடன் அழுததால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். 

பாதுகாப்பிற்காக வெளியே நின்றிருந்த போலீசார் திடீரென அழுகை சத்தம் கேட்பதைத் தொடர்ந்து உள்பகுதிக்கு ஓடிவந்தனர்.

ஏன் இப்படி அழுகிறார்கள்.. இவ்வளவு பேர் எப்படி ஒன்று சேர்ந்து உள்ளே வந்தார்கள் என்று திகைத்துப் போய் நின்றனர். 


பெண்கள் என்பதால் அவர்களைத் தொட்டுத் தூக்க தயக்கம் காட்டினர். பெண் போலீசார் குறைவான அளவிலேயே இருந்தனர். இதனால் அவர்களை அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. 

ஒப்பாரி சப்தத்தைக் கேட்ட கலெக்டர் அலுவலகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும், பொது மக்களும் மாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நின்று பார்த்தனர்.

யாருக்கோ பிரச்னை ஏற்பட்டுள்ளது. சோகம் தாங்காமல் அழுகின்றனர் என்று நினைத்தனர். 

அதிர்ச்சியடைந்த பலரும் இது குறித்து சுற்றி நின்றிருந்த பெண்களிடம் கேட்ட போது தான் அது ஒப்பாரிப் போராட்டம் என்று தெரிய வந்தது.

இது குறித்து ஜனநாயக மாதர்சங்க மாவட்டத் தலைவர் ஜானகி, செயலாளர் ராணி ஆகியோர் கூறுகையில், ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.


இதற்கு அருகே பேருந்து நிறுத்தம், கடைகள், வீடுகள் உள்ளன. மது குடித்து விட்டு வரும் குடிகாரர்கள் ஆபாச செய்கை மற்றும் வார்த்தைகளால் திட்டுகின்றனர். 

அரைகுறை ஆடையுடன் படுத்து புரண்டும் வருகின்றனர். மாணவியர், பெண்களுக்கு பெரும் சிரமத்தை இச்செயல் ஏற்படுத்துகிறது.

பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பல்வேறு கால கட்டங்களில் ஏராளமான போராட்டங்களை நடத்தினோம். பலனில்லை. 

எனவே இவற்றை இடமாற்றம் செய்யக் கோரி ஒப்பாரி போராட்டம் நடத்தினோம் என்றனர்.

இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி, எஸ்ஐ.சத்யபிரபா ஆகியோர் இவர்களை அகற்றுவதில் படாதபாடு பட்டனர். சில நிமிடங்களில் ஒவ்வொருவராக வெளியேறினர்.


இந்நிலையில் எம்.எல்.ஏ பாலபாரதி வந்தார். இவரிடம் கலால், டாஸ்மாக் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். 

எம்.எல்.ஏ பாலபாரதி கூறுகையில், 4 முறைக்கு மேல் போராட்டம் நடத்தியுள்ளோம். இக்கடையினால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. 

இருந்தாலும் கடையை அகற்றவே மாட்டோம் என்றே அதிகாரிகள் கூறி வருகின்றனர். அகற்றா விட்டால் கலெக்டர் அலுவலகத்தை விட்டுச் செல்ல மாட்டோம் என்றார்.

அதிகாரிகள் தரப்பில் பேசுகையில், திடீரென கடையை அகற்ற முடியாது மாற்று இடம் கிடைத்ததும் கடையை இடம் மாற்றி விடலாம். இருப்பினும் இதற்கு யாரும் ஒத்துழைக்கவில்லை.


இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட்.15க்குள் கடையை இடமாற்றம் செய்து கொள்கிறோம் என்று உறுதியளித்தனர். இந்த பேச்சுவார்த்தை மதியம் 1.40வரை நீடித்தது. 

தீர்வு ஏற்படா விட்டால் இவர்களை கைது செய்ய போலீஸ் வாகனம் கொண்டு வரப்பட்டது. ஆக.15க்குள் இடமாற்றம் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் போராட்டம் ‘வேறு மாதிரியாக’ மாறும் என்றும் மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர். 


இதனைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர். பல மணி நேரம் நீடித்த இப்பிரச்னையால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
Tags:
Privacy and cookie settings