தலைமை நாற்காலியில் அமர மறுத்த மாமனிதர் !

ஒரு விழாவின் போது தனக்கு வழங்கப்பட்ட நாற்காலி மற்ற நாற்காலிகளை விடப் பெரியதாக இருந்த காரணத்தினால், அதில் அமர மறுத்தார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். 
கலாம் மறைவையொட்டி, மணற்சிற்ப அஞ்சலி. | படம்: ஏ.எஃப்.பி
அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது. வாரணாசியில் உள்ள ஐஐடி (பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்) பட்டமளிப்பு விழாவின்போது மேடையில் ஐந்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. 

அவற்றில் ஒரு நாற்காலி மட்டும் அளவில் பெரியதாக இருந்தது. அந்த நாற்காலி கலாமுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் தான் அமர மறுத்துவிட்டு, பல்கலைக்கழக துணை வேந்தரை அமரச் சொன்னார். 

ஆனால் அவரும் மரியாதை நிமித்தமாக அதில் அமரவில்லை. எனவே, உடனடியாக மற்ற நான்கு நாற்காலிகளின் அளவிலேயே இருந்த ஒரு நாற்காலி மேடைக்குக் கொண்டு வரப்பட்டது. 

குடியரசுத் தலைவராக இருந்த போதிலும் தன்னை மற்றவர் களைவிட உயர்ந்தவராகக் கருதிக் கொள்ளாமல், மற்றவர்களைப் போல தானும் சாதாரணமானவன் என்று கலாம் இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டிய நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நினைவு கூரப்படுகிறது. 

அவர் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானியாக இருந்தபோது, பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு கட்டிடத்தின் சுற்றுச்சுவர்களில் உடைந்த கண்ணாடித் துண்டுகளை வைக்க திட்டமிடப்பட்டது. 

ஆனால், கலாம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதற்குக் காரணமாக அவர் கூறியது: "அப்ப டிச் செய்தால் அந்தச் சுவர்களின் மீது பறவைகள் அமர முடியாது!" 

அதேபோல, தனக்குக் கீழ் பணியாற்றிய ஒருவர் தனது வேலைப்பளு காரணத்தால் தன் குழந்தைகளை, நகரத்தில் நடக்கும் ஒரு கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனது. இதனை அறிந்த கலாம், உடனே அந்த பணியாளரின் குழந்தைகளை தானே கண்காட்சிக்கு அழைத்துச் சென்று நெகிழவைத்தார். 

2002-ம் ஆண்டில் அடுத்த குடியரசுத் தலைவர் என்று அறிவிக் கப்பட்ட பிறகு அவர் ஒரு சாதா ரணமான பள்ளிக்கு உரையாற்றச் சென்றார். அப்போது அவர் உரை யாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று மின்சார வெட்டு ஏற்பட்டது. 

உடனே தனது பாதுகாப்பு குறித்தெல்லாம் கவலைப்படாமல், தன் இருக்கையில் இருந்து எழுந்து மாணவர்களிடையே சென்று நின்றுகொண்டார். 

சுமார் 400 மாணவர்களுக்கு மத்தியில் அவர் தனது உரையை எந்த வித சலனம் இன்றி நிகழ்த்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக, தான் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றவுடன் முதன் முறையாக கேரளாவுக்குச் சென்றார். 

அங்கு தன்னுடைய விருந்தாளிகளாக யாரை அழைத்தார் தெரியுமா? செருப்புத் தைப்பவர் ஒருவரையும், ஒரு சிறிய உணவு விடுதியின் உரிமையாளரையும்தான். 

திருவனந்தபுரத்தில் தான் விஞ்ஞானியாகப் பணியாற்றிய காலத்தில் தனக்கு அறிமுகமான இந்த எளியவர்களை தனது விருந்தாளிகளாக அழைத்ததன் மூலம் கலாம் எத்தகைய பண்பாளர் என்பது தெரிய வருகிறது. 
Tags:
Privacy and cookie settings