கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பவித்ராவிடம், "விவாகரத்து என்ன கடைகளில் கிடைக்கும் பொருளா? " என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே குச்சிபாளையத்தை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பவித்ரா (23). இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது. பவித்ராவும், ஆம்பூரை சேர்ந்த ஷமில் அகமது (26) என்பவரும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நிர்வாகம் 2 பேரையும் வேலை விட்டு நீக்கியது. அதைத்தொடர்ந்து ஷமில் அகமது, ஈரோட்டில் உள்ள நகைகடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். பவித்ரா அடிக்கடி ஈரோட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி பவித்ரா திடீரென மாயமானார்.
இதுகுறித்து பவித்ராவின் கணவர் பழனி, பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், பவித்ரா மாயமானது குறித்து விசாரணை நடத்துவதற்காக, கடந்த ஜூன் 15 ஆம் தேதியன்று, ஷமில் அகமதுவை இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் தலைமையில் காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். அப்போது, காவல்துறையினர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷமில் அகமது 26 ஆம் தேதி சிகிச்சை
பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து 27 ஆம் தேதி இரவு, ஆம்பூரில் கலவரம் வெடித்தது. கலவரத்தின்போது போலீஸ் வாகனங்கள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து 27 ஆம் தேதி இரவு, ஆம்பூரில் கலவரம் வெடித்தது. கலவரத்தின்போது போலீஸ் வாகனங்கள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
மேலும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தாக்கப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, இதுவரை 126 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் உள்ளிட்ட 7 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்ற விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், மாயமான பவித்ராவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என அவரது கணவர் பழனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து தனிப்படையினர் பவித்ராவை தேடிவந்தனர்.
மாயமான பவித்ரா மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்டோரின் செல்போன் மூலம் அவர்கள் எங்கு தொடர்பு கொண்டு பேசுகிறார்கள் என்பதை காவல்துறையினர் கண்காணித்தனர். அப்போது சென்னை கோயம்பேட்டில் இருந்து பவித்ரா அடிக்கடி அவருடைய தோழியை தொடர்பு கொண்டது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து காவல்துறையினர் சென்னை கோயம்பேட்டுக்கு சென்று, நேற்று முன்தினம் இரவு பவித்ராவை மீட்டனர். மேலும் பவித்ராவுடன் இருந்த 2 வாலிபர்களையும் காவல்துறையினர் பிடித்தனர்.
இந்நிலையில், பவித்ராவை இன்று உயர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். மேலும் பவித்ராவின் கணவர் பழனி, கைக்குழந்தையுடன் ஆஜரானார். அப்போது, தனது கணவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும் என்று நீதிபதிகளிடம் பவித்ரா கோரிக்கை வைத்தார்.
அதனைக்கேட்ட நீதிபதிகள், "விவாகரத்து என்ன கடையில் கிடைக்கும் பொருளா?" என கேள்வி எழுப்பியதோடு, முறையாக கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்துமாறு பவித்ராவுக்கு அறிவுறுத்தினர்.
மேலும், ஆம்பூரில் நடந்த உயிரிழப்பு மற்றும் வன்முறை போன்றவை வருத்தம் அளிக்கின்றன என்றும், கணவருடன் பவித்ரா முறையாக குடும்பம் நடத்தியிருந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வந்திருக்காது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
திருமணமான பிறகு பெண்ணுக்கு வேறு நபருடன் தொடர்பு ஏற்படுவதால் பிரச்சனை எழுகிறது என்றும், இதுபோன்ற சூழலில் பிரச்சனையை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
அப்போது, அரசு வழக்கறிஞர், சட்டம் கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசிடம் கேட்டு தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.