ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்தக் கூடாது: ஜி.கே.வாசன்

பொதுமக்கள் தாங்களே விரும்பி ஹெல்மெட் அணியும் நிலையை உருவாக்க வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்தக் கூடாது என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். 
 ஜி.கே.வாசன் | கோப்புப் படம்
தமாகா இளைஞரணியின் முதல் செயற்குழுக் கூட்டம், அதன் தலைவர் எம்.யுவராஜா தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற ஜி.கே.வாசன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: 

ஹெல்மெட் அணிவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் ஹெல்மெட் அணிவதில் பல பிரச்சினைகள் உள்ளன. பொதுமக்கள் தாங்களே விரும்பி ஹெல்மெட் அணியும் நிலையை உருவாக்க வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்தக் கூடாது. 

போதிய கால அவகாசம் தரப்படாததால் தட்டுப்பாடு அதிகமாகி ஹெல்மெட் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்களால் ஹெல்மெட் வாங்க முடியவில்லை. எனவே, இதற்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். 

முல்லை பெரியாறு அணை, தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினையாகும். எந்த ரூபத்தில் எங்கிருந்து ஆபத்து வந்தாலும் அணையை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. எனவே, அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை நிறுத்த வேண்டும். இதற்கு கேரள அரசின் அனுமதி தேவையில்லை. 

தமிழகத்தில் கவுரவக் கொலைகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். ஜாதி, மத உணர்வுகளை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமாகா உறுப்பினர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இளைஞர்கள். அதனால் கட்சிப் பொறுப்புகள் அனைத்திலும் இளைஞர்களுக்கு 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத் தலைவர்களில் 50 சதவீதம் இளைஞர்களைக் கொண்ட கட்சி தமாகா மட்டுமே. 

இவ்வாறு வாசன் கூறினார். 
Tags:
Privacy and cookie settings