இச்சை நோக்குடன் இயங்கும் செய்தி ஊடகங்கள் ஐ.பி.எஸ்.அதிகாரி !

சில செய்திச் சேனல்கள் ஊடக அறம் என்றால் என்னவென்று தெரியாமல் இயங்குகின்றன. பரபரப்புக்காக அநாகரிகமாக நடந்து கொள்ளும் செய்திச் சேனல்களை கன்டு பரிதாபப்படுகிறேன் என்று கேரளாவைச் சேர்ந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மெரின் ஜோசப் கூறியுள்ளார்.
மெரின் ஜோசப் பற்றி அடிக்கடி சர்ச்சைகள் எழுகின்றன. அவர் ஃபேஸ்புக் பக்கம் தொடங்கியதில் இருந்தே, சர்ச்சைக்குப் பஞ்சமில்லை.

அவர் ஃபேஸ்புக் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் அள்ளின. தேவையற்ற கமெண்டுகளும் பரவின. இந்நிலையில், எர்ணாகுளத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டார் ஐ.பி.எஸ்.

அதிகாரி மெரின் ஜோசப். செய்தி அதுவல்ல… விழாவுக்கு வந்திருந்த கேரளாவின் பிரபல நடிகர் நிவின் பாலியுடன் மெரின் ஜோசப் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டு அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அப்டேட் செய்தார் அதுதான் ஊடகங்களுக்குத் தீனியாகிவிட்டது.

நடிகர் நிவின் பாலியை பார்த்து மெரின் ஜோசப் புன்னகைத்தது முதல், இருவரையும் ஒரு புகைப்படம் எடுத்துத் தருமாறு எம்.எல்.ஏ.விடம் கேட்டது, ஃபோட்டோ எடுத்துக் கொண்டதை உடனே தனது ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்தது வரை காட்சி விடாமல் பதிவு செய்து ஒளிபரப்பின.

ஒரு போலீஸ் அதிகாரி தனது பணியில் இருந்து தவறிவிட்டதாகவும் செய்திகள் ஒளிபரப்பின. இது கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பானது. ஊடகங்களின் இந்தச் செயலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டு வறுத்து எடுத்திருக்கிறார் மெரின் ஜோசப்.

மெரின் ஜோசப் ஃபேஸ்புக் பதிவு:

“எர்ணாகுளத்தில் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் நான் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ பெரும் பரபரப்பை கிளப்பியிருப்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் நான் இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காததற்கும் காரணம் அது அவசியமற்றது என்று கருதியதால்தான்.

இருந்தாலும், சிலர் நான் ஏன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன், எதற்காக அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டேன் என்றெல்லாம் கேள்விகளை எழுப்புகின்றனர்.

அவர்களுக்காக சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த புகைப்படத்தை எம்.எல்.ஏ. ஹிபி ஏடன் எடுத்தார். அந்தப் புகைப்படத்தை எடுக்குமாறு நான்தான் அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன். எனது வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொண்டார்.

ஒரே மேடையில் நாங்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தபோது அங்கே பேச்சப்பட்ட ஒரு ஜோக்கிற்கு அனைவரும் சிரித்தோம். அந்த நேரத்தில்தான் அந்தப் புகைப்படமும் எடுக்கப்பட்டது. ஆனால், சில செய்திச் சேனல்கள் ஊடக அறம் என்றால் என்னவென்று தெரியாமல் இயங்குகின்றன.

அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட தருணத்தில் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த மாநில உள்துறை அமைச்சர் ஏற்கெனவே அங்கிருந்து சென்றிருந்தார். விழா ஒருங்கிணைப்பாளர்களோ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

அந்த விழாவில் எனக்கு அளிக்கப்பட்டிருந்த ஒரே ஒரு வேலை, உறுதிமொழி வாசிப்பது. அதையும் நான் ஏற்கெனவே முடித்திருந்தேன். எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு சும்மா நின்று கொண்டிருந்த நான் என்ன செய்திருக்க வேண்டும் என செய்திச் சேனல்கள் எதிர்பார்க்கின்றன.

என் வேலைகளை முடித்துவிட்டு நான் சற்று ஓய்வாக இருந்தபோது தனிப்பட்ட முறையில் ஒரு ஃபோட்டோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தது தவறா? அப்படி செய்யக்கூடாது என சட்டம் இருக்கிறதா?

ஒரு நடிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் நான் கடமை தவறிவிடவில்லை அல்லது அந்த கல்லூரியின் நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை. நான் செய்தது எல்லாம் அந்த விழா அரங்கில் வேலை இல்லாமல் இருந்த ஒரு செய்தியாளரின் கவனத்தை ஈர்த்தது மட்டும்.

பரபரப்புக்காக அநாகரிமாக, இச்சை நோக்குடன் இயங்கும் செய்தி ஊடகங்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். ஊடகங்கள் தங்கள் பிழைப்புக்காக இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செல்லக்கூடாது என வேண்டுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி சர்ச்சை

தனது தோற்றத்தை வைத்தே பதவி உயர்வு பெற்றதாக சித்தரித்து எழுதிய பிரபல ஆங்கில வாரப் பத்திரிகையை எதிர்த்து ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால் நோட்டீஸ் அனுப்பினார். அந்த பரபரப்பு மறைவதற்குள் மற்றொரு பெண் அதிகாரி, டிவி சேனலை சரமாரியாக விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings