தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் போலீஸ் சூப்பிரண்ட் பலி

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் நடந்துவரும் துப்பாக்கிச் சண்டையில் அம்மாநில ரகசிய போலீஸ் துறையின் சூப்பிரண்ட் பலியானார்.
பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை ராணுவ சீருடை அணிந்தபடி ஒரு காரில் வந்த தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பஞ்சாப் நோக்கி வந்த ஒரு பயணிகள் பேருந்தை அமிர்தசரஸ் -பதான்கோட் நெடுஞ்சாலையில் வழிமறித்து துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டனர்.

பின்னர், அருகாமையில் உள்ள டினாநகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தீவிரவாதிகள், அங்கிருந்த போலீசார் மீது துப்பாக்கிகளால் சுட்டனர். போலீசாரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர்.

இதனால், அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த தாக்குதலில் டினாநகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முக்தியார் சிங் உள்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, லாரிகளில் நூற்றுக்கணக்கான வீரர்கள் டினாநகர் பகுதியை நோக்கி விரைந்தனர். தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

மேற்கண்ட இரு தாக்குதல்களிலும் பொதுமக்களில் ஆறு பேர், போலீஸ் தரப்பில் இருவர் என மொத்தம் எட்டு பேர் பலியாகினர்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையில் உள்ள அமிர்தசரஸ்-பதான்கோட் ரெயில் நிலையங்களுக்கிடையிலான தண்டவாளத்தில் 5 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தீவிரவாதிகளுடன் இன்று பிற்பகல் வரை நீடித்த துப்பாக்கிச் சண்டையில் பஞ்சாப் மாநில (ரகசிய) போலீஸ் சூப்பிரண்ட் பல்ஜித் சிங் என்பவர் பலியானதாக அம்மாநில போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இன்று பலியானோர் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings