இந்திய அளவில் சுற்றுலாத் துறையில் தமிழகம் முதலிடம் !

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடக்க நிகழ்ச்சி கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கினார்.
 
முத்துக்கருப்பன் எம்.பி., தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் ஆர்.முருகையா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை ஆணையாளர் அர்சகாப் மீனா, விழா தொடர்பாக விளக்க உரையாற்றினார்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு, சாரல் விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

முதல் அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறை முன்னோடி துறையாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக சுற்றுலாத்துறை, இந்திய அளவில் 2–வது இடத்தில் இருந்தது.

தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது பெருமையாக உள்ளது. அதற்கு காரணம் முதல் அமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை தான். 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது சுற்றுலாத்துறை அவர் கைவசம் இருந்தது.

அதனால் சுற்றுலாத்துறையை பற்றி ஜெயலலிதா நன்கு அறிவார். குற்றாலத்துக்கு சீசன் காலங்களில் வரும் பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

2011ம் ஆண்டு 33 லட்சம் பேரும், 2012ம் ஆண்டு 50 லட்சம் பேரும், 2013ம் ஆண்டு 70 லட்சம் பேரும், 2014ம் ஆண்டு 95 லட்சத்து 78 ஆயிரம் பேரும் குற்றாலத்துக்கு சீசன் காலங்களில் வந்து சென்றுள்ளனர்.

அதேபோல் கடந்த ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 48 ஆயிரத்து 106 பேர் குற்றாலத்துக்கு வந்து சென்றுள்ளனர். இந்த ஆண்டு சென்னையில் இருந்து குற்றாலத்துக்கு 5 சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.
 
முதல் அமைச்சர் ஜெயலலிதா எடுத்து வரும் நடவடிக்கையால் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் சண்முகநாதன் பேசினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விழாவையொட்டி இன்று காலை நீச்சல் போட்டி நடைபெற்றது.அதனை ஏ.டி.எஸ்.பி. அரவிந்தன் தொடங்கி வைத்தார்.
Tags:
Privacy and cookie settings