சட்ட விரோத ஆட்டோ மற்றும் டாக்சிகளை மீண்டும் போக்குவரத்துக்கு பயன்படுத்தாமல் தடுக்க அவற்றை ஜே.சி.பி. உதவியால் நசுக்கி அழிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
சட்ட விரோத ஆட்டோ டாக்சிகள் பிடிபட்டால் போக்குவரத்து அதிகாரிகள் அவற்றை இரண்டாக வெட்டி துண்டாக்கி விடுவார்கள்.
மோசடி ஆசாமிகள் மீண்டும் அவற்றை ஒன்றாக இணைத்து சட்ட விரோதமாக ஓட்டுகின்றனர். மோசடி ஆசாமிகளின் இந்த செயல் அதிகாரிகளுக்கு பெரிய தொல்லையாக அமைந்துள்ளது.
அதனால் இப்போது பிடிபடும் சட்ட விரோத வாகனங்கள் ஜே.சி.பி. யால் நசுக்கி அழிக்கப்படுகின்றன.
இந்த முடிவுக்கு ஆர்.டி.ஓ. மற்றும் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளை உள்ள டக்கிய மும்பை பெருநகர பிராந்திய போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஆர். டி.ஓ. அதிகாரிகள் பிடிபடும் ஆட்டோ மற்றும் டாக்சிகளை ஜே.சி.பி.யால் நசுக்கி அழித்து வருகின்றனர்.
பிடிபடும் வாகனங்கள் தகிசரில் உள்ள ஆா்.டி.ஓ. அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள மைதனத்தில் வரிசையாக நிறுத்தி ஜே.சி.பி.யால் நசுக்கப்படுகிறது.
பிடிபடும் ஆட்டோ, மற்றும் டாக்சிகள் மீண்டும் வீதிக்கு வரக்கூடாது என்பதற்காக இப்படி நசுக்கி அழிக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன் இது போன்று பறிமுதல் செய்யப்படும் ஆட்டோ மற்றும் டாக்சிகள் வெல்டிங் கருவி மற்றும் இரும்பு வெட்டும் கருவியால் இரண்டு துண்டுகளாக ஆக்கப்படும்.
பின்னர் அவை ஆர்.டி.ஓ அலுவலகத்தின் மைதானத்தில் குவித்து வைத்து ஏலத்தில் விற்பனை செய்யப்படும்.
பழைய இரும்பு விலைக்கு அவற்றை ஏலம் எடுக்கும் வியாபாரிகள் அந்த ஆட்டோக்களை மீண்டும் ஒட்ட வைத்து லேசான மாற்றங்கள் செய்து குறைந்த தூரங்களில் ஆட்டோக்களாக ஓட்டுகின்றனர்.
இது போன்ற ஆயிரக்கணக்கான போலி ஆட்டோக்கள் இருப்பதாக ஆட்டோ யூனியன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற சட்ட விரோத ஆட்டோக்கள் பெரும்பாலும் ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோக்களாக ஓட்டுகின்றனர்.
இந்த போலி ஆட்டோக்கள் தென்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.