என்.எல்.சி. பிரச்சினைக்கு திமுக வழியில் தீர்வு !

என்.எல்.சி. பிரச்சினையில் திமுக ஆட்சியின்போது நிர்வாகத்தையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் நேரில் அழைத்துப் பேசி தீர்வு காணப்பட்டது
போல முதல்வர் ஜெயலலிதாவும் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி யோசனை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி 20-7-2015 இரவு முதல் கால வரம்பற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. 

நிரந்தரத் தொழிலாளர்கள் நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால், மின் உற்பத்தியும் பாதிக்கும் அபாயம் உள்ளது. 

தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்விற்கான கோரிக்கைகளைக் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்துமாறு நிர்வாகத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன. 

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 12 ஆயிரம் நிரந்தர ஊழியர்கள், 10 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் என மொத்தம் 22 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். நிரந்தர ஊழியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகம் ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். 

நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் 31-12-2011 உடன் முடிவடைந்து விட்டது. புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் 1-1-2012 முதல் ஏற்படுத்தப் பட்டு நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். 

ஆனால் கடந்த 42 மாதங்களாக எந்தவித முடிவுமின்றி நீடித்துக் கொண்டே இருக்கும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுப் பிரச்சினை குறித்து இதுவரை 27 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. 

நிரந்தர சங்கங்கள் சார்பில் 25 சதவிகித ஊதிய உயர்வு கேட்டு வருகின்றனர். ஆனால் நிர்வாகத்தினர் 10 சதவிகித ஊதிய உயர்வு மட்டுமே தரப்படும் என்று கூறுகிறார்களாம்.

மேலும் இறந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு, இன்கோசர்வ் தொழிலாளர்கள் இரண்டாயிரம் பேரை பணி நிரந்தரம் செய்தல் மற்றும் ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன போன்ற தொழிலாளர்களின் கோரிக்கைகள் பற்றியும் நிர்வாகம் எவ்வித உடன்பாட்டுக்கும் வரவில்லை. 

கடந்த முறை 2007ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சிக் காலத்தில், ஊதிய ஒப்பந்தம் போடப் பட்ட போது, 25 சதவிகித ஊதிய உயர்வும், அதைப் போலவே 1-1-1997 அன்று தி. மு. கழக ஆட்சிக் காலத்தில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்ட போது 60 சதவிகித ஊதிய உயர்வும் தரப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த முறை நிர்வாகம் தொழிற்சங்கங்களை மதிக்காமலும், ஊதிய ஒப்பந்த முன் மாதிரிகளைக் கவனத்தில் கொள்ளாமலும் நடந்து வருவதால், தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.

என்.எல்.சி. தொழிற்சங்கங்களுடன் சென்னையில் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் இலாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனம், ஊழியர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு அளிக்க முன் வர மறுப்பது நியாயமாகாது. 

இந்தப் பிரச்சினை குறித்து, தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் மு. சண்முகம் கடந்த 20ஆம் தேதியன்றே மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் கோயல் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், "என்.எல்.சி. நிர்வாகத்தின் பிடிவாதமான போக்கு தொழிலாளர்களை போராட்டப் பாதைக்கு இழுத்துச் சென்றிருக்கிறது. 

20-7-2015 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட வேலை நிறுத்தத்தின் காரணமாக 2,490 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படக் கூடிய பின்னடைவு ஏற்படும். 

எனவே கொந்தளிப்பான இந்த நிலையிலிருந்து என்.எல்.சி. நிர்வாகத்தை மீட்டு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் சுமூகமான முடிவு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். 

மேலும் தி.மு. கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர், ச. தங்கவேலு 23-7-2015 அன்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் கோயல் அவர்களை நேரிலே சந்தித்து, என்.எல்.சி. பிரச்சினையை விளக்கிக் கடிதம் ஒன்றும் கொடுத்துள்ளார். 

ஆனால் தமிழக அ.தி.மு.க. அரசின் சார்பில் இந்தப் பிரச்சினை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்குக் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பிவிட்டு, அத்தோடு பிரச்சினை முடிந்து விட்டதாகவும், கடமை நிறைவேறிவிட்டதாகவும் கருதிக் கொண்டிருப்பது நலம் பயக்காது. 

சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிற நிலையில், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நிலவிக் கொண்டிருக்கும்போது, 

உறுதியாகக் கிடைத்து வரும் மின்சாரத்திற்கும் கேடு ஏற்படக் கூடுமென்று எச்சரிக்கப்பட்டுள்ள சூழலில் அரசின் சார்பில் முதல் அமைச்சரே தலையிட்டு, நிர்வாகத்தையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் நேரில் அழைத்துப் பேசி பிரச்சினைகளுக்குத் தக்கதொரு முடிவு காணாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

கடந்த காலத்தில், தி.மு.கழக ஆட்சியில், இது போன்றதொரு பிரச்சினை ஏற்பட்ட போது, முதலமைச்சராக இருந்த நான் நேரில் அனைவரையும் அழைத்துப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்து வைத்தேன். 
 
எனவே இனியும் தாமதிக்காமல் உடனடியாக முதலமைச்சர் ஜெயலலிதா நெய்வேலி நிறுவன நிர்வாகத்தையும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் உடனடியாக வரவழைத்து, மத்திய அரசில் உள்ள துறை அமைச்சருடன் கலந்து பேசி கருத்தறிந்து,

 பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, நடைபெறும் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். 
Tags:
Privacy and cookie settings