நடிகை அமலா, தீவிர நடிப்புக்கு விடை கொடுத்து பல ஆண்டுகளாகி விட்டன. 1989–ல் நாகார்ஜுனா வை கரம் பிடித்தது முதல் குடும்பம், குழந்தைகள் என்றாகி விட்ட அமலா, தற்போது பெரிய திரை, சின்னத் திரையில் மெல்ல மெல்லத் தலை காட்டுகிறார்.
அமலாவுக்கும் நடிப்புக்கும் இடையே இவ்வளவு ஆண்டு இடைவெளி விழுந்தது ஏன்? தற்போது ஐதராபாத் வாசியான அமலா பேசுகிறார்.
‘‘ஆமாம்... நடிப்புக்கும், எனக்கும் இடையே நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது உண்மைதான். சுமார் இருபதாண்டுகளுக்கு முன்பே நான் நடிப்பைத் துறந்துவிட்டேன். நான் சோர்ந்துபோய்விட்டேன்.
காரணம் நான் மிக இளம் வயதில் இருந்தே நடித்துக்கொண்டிருந்தேன், ஊர் ஊராகப் போய் நடனம் ஆடிக் கொண்டிருந்தேன். எனக்கு ஓர் இடைவேளை தேவைப்பட்டது. திருமணத்துக்குப் பின் அதை நான் எடுத்துக்கொண்டேன். அப்படியே 24 ஆண்டுகள் ஓடிவிட்டன!’’
உண்மையில் அமலா திரையுலகுக்குத் திரும்பியது 2012–ல் ‘லைப் இஸ் பியூட்டிபுல்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம். நெகிழ்ச்சியூட்டும் கதை கொண்ட அந்தப் படம்தான் அமலாவின் மறுபிரவேசக் களம். அப்படத்தின் இயக்குனர், அமலாதான் நடிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றதுதான் காரணமாம்.
‘‘அந்தப் படத்தில் வரும் அம்மா கதாபாத்திரத்தில் நான் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று அந்த இயக்குனர் ஆறு மாதங்களுக்கு மேலாக என்னை வற்புறுத்திக்கொண்டே இருந்தார். அவர் என்னையே நம்பி நின்றது என் மனதைத் தொட்டாலும், சினிமாவுக்குத் திரும்புவது குறித்து என்னால் உறுதியாக முடிவெடுக்க முடியவில்லை.
குடும்பக் கடமைகள், பல்வேறு தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து செய்யும் பணிகள் என்று என் கை நிறைய வேலைகள் இருந்ததுதான் காரணம்’’ என்று கூறும் அமலா, கடைசியில் ஒருவழியாக ஒப்புக்கொண்டு விட்டாராம்.
‘‘அந்தப் படத்தில், மற்ற நடிகர், நடிகையர் நடிக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் எடுத்துவிட்டார்கள். அதை எனக்குப் போட்டும் காட்டினார்கள். நான், மூன்று குழந்தைகளின் தாயாக நடிக்க வேண்டும். படமாக்கப்பட்ட மற்ற காட்சிகளைப் பார்த்ததுமே நான் உடனடியாக ஒப்புக்கொண்டு விட்டேன்’’ என்கிறார்.
அதேபோல 1990–ல் தனது கணவர் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்த ராம்கோபால் வர்மாவின் இந்திப் படமான ‘சிவா’வுக்குப் பின் அமலாவை இந்திக்குக் கொண்டு வந்தவர் மகேஷ் பட்.
‘‘மகேஷ் பட் போன் செய்து எனக்கு ஒரு கதாபாத்திரம் இருக்கிறது என்று கூறியபோது நான் தயக்கத்தோடுதான் ஒப்புக்கொண்டேன். அந்த ‘ஹமாரி அதூரி கஹானி’ படத்தின் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கியபிறகு, நான் நடித்த காட்சிகளை எடுத்தார்கள்.
நான், இம்ரான் ஹஸ்மி, வித்யா பாலனுடன் ஒரே ஒருநாள்தான் நடித்தேன். அவர்களுடன் சேர்ந்து நடித்தது எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. இம்ரான் ஒரு ஜென்டில்மேன். அழகானவர், மென்மையாகப் பேசக்கூடியவர்.
வித்யா பாலன் அற்புதமான பெண்’’ என்று புகழ் மொழி பேசுகிறார் அமலா. தகுதி வாய்ந்ததாக இருந்தால், மேலும் பல பாத்திரங்களை தான் ஏற்பேன் என்கிறார் இவர்.
‘‘நான் வீட்டையும் கவனித்துக்கொண்டு, பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறேன். அதோடு, அன்னபூர்ணா சர்வதேச திரைப்படம் மற்றும் ஊடகக் கல்லூரியின் இயக்குநராக,
புதிய திறமைகளை வளர்த்தெடுப்பதிலும், அவர்களுக்கு வழிகாட்டுவதிலும் நேரத்தைச் செலவிடுகிறேன்’’ என்று தனது நடப்பு நாட்கள் குறித்துக் கூறுகிறார் அமலா.
தனது மகன்கள் அகில், நாக சைதன்யா ஆகிய இருவரும் நல்ல நடிகர்களாகப் பெயர் பெற்றுவருவதும் அமலாவை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அம்மா, அப்பா, மகன்கள் இருவர் என்று ஒரே வீட்டில் நான்கு நடிகர்கள்! அதில் மூன்று பேர் கதாநாயகர்கள்!