‘இஸ்ரோ’வின் இணையதளம் முடக்கம் !

இஸ்ரோவின் வணிக பிரிவு இணையதள பக்கம் திடீரென மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. இதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைமை அலுவலகம் பெங்களூருவில் அமைந்துள்ளது. இந்த மையத்தின் வணிக பிரிவு நிறுவனம் ‘ஆன்ட்ரிக்ஸ்‘ என்ற பெயரில் செயல்படுகிறது.

இஸ்ரோவின் வணிகம் சார்ந்த நடவடிக்கைகள், அந்த வணிகத்தை ஊக்குவித்தல், விண்வெளி உற்பத்திகள், தொழில்நுட்ப சேவைகள், இஸ்ரோ தயாரிக்கும் தொழில்நுட்பங்களை ஓரிடத்தில் இருந்து

இன்னொரு இடத்துக்கு கொண்டு சென்று வணிகமயம் ஆக்குவது இந்த ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் பணி ஆகும். சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு இஸ்ரோ தனது சேவையை ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் மூலம் ஆற்றி வருகிறது.

இஸ்ரோ சார்பில் வணிக ரீதியாக வெளிநாட்டை சேர்ந்த 5 செயற்கை கோள்கள் பி.எஸ்.எல்.வி.சி–28 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் ஏவப்பட்டது.

இது இஸ்ரோவின் மிகப்பெரிய வணிக திட்டம் ஆகும். இந்த நிலையில் இஸ்ரோவின் வணிக பிரிவான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் இணையதள பக்கம் இன்று திடீரென மர்ம நபர்களால் முடக்கப்பட்டது.

இது சீன ஊடுருவலாளர்களின் வேலையாக இருக்கலாம்? என சந்தேகிக்கப்படுகிறது. இதை கண்டுபிடித்த ‘இஸ்ரோ‘ அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து அந்த வணிக பிரிவு நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

‘இஸ்ரோ‘ வணிக பிரிவு இணையதளம் முடக்கப்பட்ட சம்பவம் கர்நாடகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Privacy and cookie settings