குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்தோர் மீது நடவடிக்கை

திருவண்ணாமலை பகுதியில் பிஞ்சுக் குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். 
 பண்ருட்டி வேல்முருகன் | கோப்புப் படம்
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சமூக வலைதளங்களிலும் வாட்ஸ்அப்-பிலும் கடந்த 2 நாட்களாக பகிரப்பட்டு வருகிற ஒரு வீடியோ காட்சி நெஞ்சை பதற வைப்பதாக இருக்கிறது. பால் மணம் மாறாத பிஞ்சுக் குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து சந்தோஷப்படுகின்றனர் சில குடிகாரர்கள். 

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்து வருகிறோம். மதுப்பழக்கமானது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையே நாசமாக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாகத்தான் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிற இந்த வீடியோ காட்சி இருக்கிறது. 

இந்த வீடியோ காட்சியில் பிஞ்சுக் குழந்தைக்கு மதுவை ஊற்றி கொடுத்து குடிக்க வைத்து, அதனைப் பார்த்து மகிழ்ச்சி கூச்சலிடுகின்றனர் குடிநோயாளிகள். மதுப்பழக்கம் தலைமுறை தலைமுறையாக தமிழர்களை அழித்து நாசமாக்கிவிடும் என்ற பதற்றத்தை இந்த வீடியோ காட்சி ஏற்படுத்துகிறது. 

இந்த குடிநோயாளிகளின் இருசக்கர வாகனத்தின் பதிவெண்கூட வீடியோவில் தெளிவாக இருக்கிறது (TN 25 AJ 8209). இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்ட நபர்களை விரைவாகக் கண்டுபிடித்து மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். 

அதேநேரத்தில், மதுவிலக்கை தமிழகத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து செயல்படுவதற்கான தருணமாகவும் இதைக் கருத வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார். 
Tags:
Privacy and cookie settings