இந்து மதத்தில் இருந்து, இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகு பெயரை மாற்றிக் கொள்ளாதது ஏன்?, என்பதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா விளக்கம் அளித்தார்.3–வது திருமணம்
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும், தமிழ் பட உலகின் முன்னணி இசையமைப் பாளர்களில் ஒருவருமான யுவன் சங்கர்ராஜா ஏற்கனவே 2 திருமணங்கள் செய்து மனைவிகளை விவாகரத்து செய்தவர்.
அதன் பிறகு அவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறி, கீழக்கரையை சேர்ந்த ஜெபரூனிசா என்ற பெண்ணை 3–வது திருமணம் செய்து கொண்டார்.
3–வது திருமணத்துக்கு பின் ஊடகங்களை சந்திப்பதை அவர் தவிர்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் அவர் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றிற்கு யுவன் சங்கர்ராஜா அளித்த பதில்களும் வருமாறு :
கேள்வி : நீங்கள் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகும் பெயரை மாற்றிக் கொள்ளாதது ஏன்?
பதில்:– நான் சினிமாவுக்கு வரும்போதே யுவன் சங்கர்ராஜா என்ற பெயரில் தான் அறிமுகம் ஆனேன். அந்த பெயர் தான் ரசிகர்களுக்கு பரீட்சயமானது.
புதிதாக பெயர் சூட்டிக் கொண்டால் அந்த பெயரை ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா? என்பது சந்தேகம் தான். அதனால் தான் பெயரை மாற்றவில்லை.
கேள்வி:– உங்களுடைய 3–வது திருமணத்தில் உங்களின் தந்தை இளையராஜா கலந்து கொள்ளவில்லையே? உங்களின் திருமணத்தை அவர் ஏற்றுக் கொண்டாரா? அல்லது எதிர்ப்பு தெரிவித்தாரா?
பதில் : எதிர்க்க வில்லை. ஊடகங்கள் குறிப்பிட்டப்படி, அது ரகசிய திருமணம் அல்ல. என் குடும்பத்தினர் அனைவருக்கும் முன்பே தெரியும்.
அப்பாவிடம் தெரிவித்த போது உனக்கு எது சந்தோஷமோ அதை செய் என்று அனுமதி கொடுத்தார்.அப்பாவின் ஆசி
என் குடும்பத்தினர் அனைவரும் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
பெண் வீட்டாருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டதால் உடனடியாக திருமணத்தை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
அப்பாவை சந்தித்து திருமணத்துக்கு அழைத்த போது, எப்போது திருமணம்? என்று கேட்டார். 2 நாளில் திருமணத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை பற்றி அவரிடம் விளக்கினேன்.
நேரம் கிடைக்காத காரணத்தால் அப்பா என் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. திருமணத்தை முடித்த மறுநாளே அப்பாவிடம் சென்று, ஆசி பெற்றேன்.
இவ்வாறு யுவன் சங்கர்ராஜா கூறினார்.