யாகூப் மேமனின் கடைசி மனு சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிப்பு !

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமனின் கடைசி மறுசீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.
  yakub memon
இதனால் ஜூலை 30-ந் தேதி யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவது உறுதியாகி உள்ளது. ஜூலை 30-ந் தேதிதான் யாகூப் மேமனின் பிறந்த நாளும் கூட... மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் 12-ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

நாட்டையே உலுக்கிய முதலாவது பெரிய தீவிரவாத தாக்குதலான இதில் 257 அப்பாவி மக்கள் பலியானார்கள். 713 பேர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சதிகாரர்கள் தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன், யாகூப் மேமன் ஆகியோர்தான்.

குண்டு வெடிப்பு நடந்ததும் மூவரும் மும்பையில் இருந்து வெளியேறி வெளி நாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர். இவர்களில் யாகூப் மேமன் காத்மண்டு விமான நிலையத்தில் நேபாள போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் சி.பி.ஐ. வசம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

மும்பை தடா நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு வழக்கில் 2007-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பி.டி.கோடே தீர்ப்பு அளித்தார். மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஆயுள்தண்டனை, 14 ஆண்டு சிறை, 10 ஆண்டு சிறை எனவும் தண்டனை விதிக்கப்பட்டது.

யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மும்பை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன. மேமனின் அத்தனை மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கருணை மனு கடந்த ஆண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் நிராகரிக்கப்பட்டது. இதன் பிறகு யாகூப் மேமன் உச்சநீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இம்மனுவையும் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து யாகூப் மேமனை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. வரும் 30-ந்தேதி காலை 7 மணிக்குள் யாகூப் மேமனை தூக்கில் போட மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் யாகூப் மேமன் 2-வது முறையாக உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது யாகூப் மேமனின் கடைசி மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இதனால் வரும் 30-ந் தேதி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. ஜூலை 30-ந் தேதிதான் யாகூப் மேமனின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings