சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஏற்பு !

2 minute read
முதல் – அமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27–ந் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார்.
 
ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி, மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

தண்டனை மற்றும் அபராதத்தை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அதன் பேரில் அக்டோபர் 17–ந் தேதி 4 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் வழக்கை நீதிபதி குமாரசாமி மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து சுமார் ஒரு மாதத்தில் நீதிபதி குமாரசாமி விசாரணையை நடத்தி முடித்தார். பிறகு அவர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வில்லை என்று கூறி 4 பேரையும் விடுதலை செய்தார்.

நீதிபதி குமாரசாமி தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த கணக்கீட்டில் முரண்பாடுகள் இருந்ததால், அந்த தீர்ப்பு கடும் விமர்சனத்துக்குள்ளான.

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தி.மு.க, பா.ம.க. உள்பட பல கட்சிகள் வலியுறுத்தின.

கர்நாடக மாநில அரசு நீண்ட ஆய்வுக்குப் பிறகு கடந்த மாதம் 23–ந் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. தி.மு.க. சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 16–ந் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், ஆர்.கே.அகர்வால் இருவரும் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அகர்வால் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். 3 வாரத்தில அவர்கள் பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் பதில் அளித்த பிறகு கர்நாடக அரசு, தி.மு.கவும் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். தி.மு.க., கர்நாடக மாநில அரசுக்கும் பதில் அளிக்க 3 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் குற்றம் சுமத்தியவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் 6 வாரத்துக்குள் அதாவது 1½ மாதத்துக்குள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இரு தரப்பினரும் பதில் அளித்த பிறகு 8–வது வாரம் அதாவது 2 மாதம் கழித்து மீண்டும் இந்த வழக்கில் விசாரணை தொடங்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

எனவே இனி இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் மாத இறுதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ளகோரி சுப்பிரமணியசாமி மனு செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
Tags:
Privacy and cookie settings