டெல்லி: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் டிவிட்டர் பக்கத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
உலகத்தில் வாழும் இந்தியர்கள் அனைவர் மனதிலும் ‘மக்களின் ஜனாதிபதி'யாக இடம் பிடித்த அப்துல் கலாம், நேற்று மாரடைப்பால் காலமானார்.
தனது மறைவுக்கு 10 மணி நேரத்திற்கு முன்பு அவர் டிவிட்டரில் ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில் அவர், ‘ஷில்லாங் போகிறேன். லிவபிள் பிளானட் குறித்து பேசுகிறேன்' என அவர் பதிவு செய்திருந்தார். அது தான் அவர் கடைசியாக வெளியிட்ட டிவிட்டர் பதிவு.
அந்த டிவிட்டில் அவர் கூறியிருந்த படி, ஷில்லாங்கில் பேசிக் கொண்டிருந்த போது தான் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது. காலத்தால் அழியாத தலைவராக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டவர் கலாம்.
எனவே, அவரது டிவிட்டர் பக்கத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க அவருக்கு நெருக்கமானவர்கள் சேர்ந்து முடிவு செய்துள்ளனர்.
ஆனால், கலாமின் டிவிட்டர் பக்கத்தின் பெயரை மட்டும், ‘கலாமின் நினைவுகளுடன்' ('In memory of Dr Kalam') என அவர்கள் மாற்றியுள்ளனர்.
தொடர்ந்து இப்பக்கத்தில் கலாமின் எண்ணங்கள், கொள்கைகள், இந்தியாவை பற்றிய அவரது கனவுகள் போன்றவற்றை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. கலாமின் டிவிட்டர் பக்கத்தை 1.4 மில்லியன் பேர் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.