கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும்.. விசாரணைக் குழு !

கருப்புப் பணப் பெருக்கத்தை தடுக்க கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும், இதற்காக சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
படம்: ராய்ட்டர்ஸ்.
கருப்புப் பண பெருக்கத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு தனது 3-வது அறிக்கையில், கிரிக்கெட் சூதாட்டத்துக்கும் கருப்புப் பணத்துக்கும் இடையே உள்ள உறவைச் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் சூதாட்டம் மூலம் புழங்கும் சட்ட விரோத மற்றும் கணக்கில் வராத பணம் குறித்த விவகாரத்தை இந்த 3-வது அறிக்கை எழுப்பியுள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில், “கிரிக்கெட் சூதாட்டம் என்ற சட்ட விரோத நடவடிக்கைகள் சிலபல சட்டப்பிரிவுகளால் கட்டுப்படுத்தப் படவேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளது.

அதே போல், இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் அயல்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அயல்நாட்டு நிறுவன முதலிட்டாளர்கள் அமைப்பு வழங்கும் ‘பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ்’ என்ற பத்திர விவகாரத்தில் மேலும் கண்காணிப்புகள் தேவை என்று பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்துக்கு சிறப்பு விசாரணைக் குழு அறிவுறுத்தியுள்ளது.

கருப்புப் பண முறைகேட்டுக்காக பங்குச் சந்தை போன்ற மூலதனச் சந்தையை தவறாகப் பயன்படுத்துவது குறித்து செபி ஒரு திறம்பட்ட கண்காணிப்பு முறையை உருவாக்குதல் அவசியம் என்றும்,

இதன் மூலம் பங்குகள் விலையில் வழக்கத்துக்கு மாறான ஏற்றம் இருப்பின் உடனடியாக அதனை சிபிடிடி மற்றும் நிதி புலனாய்வு கிளைக்கும் தெரிவிக்க வெண்டும் என்றும் சிறப்பு விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதே போல் அயல்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வழங்கும் பங்குப் பத்திரமான பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் யார் பெயரில் உள்ளது, அதனால் பயனடைவோர் யார் என்ற விவரங்களிலும் செபி நாட்டம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
 
கேய்மன் தீவுகளிலிருந்து பி-நோட்ஸ் வாயிலாக ரூ.85,000 கோடி நிதி வந்துள்ளது. ஆனால் அதன் மக்கள் தொகை 54,000 மட்டுமே (2010), ஆகவே பி-நோட்ஸ் முதலீடுகளின் இறுதிப் பயனாளர்கள் அனைவரும் கேய்மன் தீவுகளிலிருப்பவர்கள் என்பது சாத்தியமுடையதாகத் தெரியவில்லை.

அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மதம் சார்ந்த அமைப்புகளுக்கு வரும் அன்பளிப்பு தொகைகள் வாயிலாகவும் கருப்புப் பணம் பெருக வாய்ப்புள்ளது, சிபிடிடி இதனை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்பதோடு இந்தத் தொகைகளை வரி அமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
Tags:
Privacy and cookie settings