குற்றாலத்தில் சாரல் திருவிழா !

குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ள நிலையில் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்கா சாரல் திருவிழா மற்றும் மலர், பழக்கண்காட்சிகளுக்கு ஆயத்தமாகி வருகிறது.
 
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பொழுது போக்குவதற்கு அருவி, படகு குழாம், ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவை முக்கியமான அம்சங்களாக விளங்குகிறது.

தற்போது குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ள நிலையில் அருவிப்பகுதிகள், படகு குழாம், சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றில் கூட்டம் அலை மோதுகிறது. படகு குழாமில்சனி, ஞாயிற்று கிழமைகளில் சாராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வசூலாகிறது.

சுற்றுச்சூழல் பூங்காவிலும் பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதற்கிடையே இன்னும் சில தினங்களில் சாரல் திருவிழா துவங்கவே உள்ளது.

சாரல் திருவிழாவை முன்னிட்டு ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் பழக்கண்காட்சி, மலர் கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி ஆகியவை நடத்தப்படுவது வழக்கம்.

தற்போது சுற்றுச்சூழல் பூங்காவில் இதற்கான ஏற்பாடுகள் மற்றும் மராமத்து பணிகள் நடந்துவருகிறது. பூங்காவில் உள்ள மரப்பாலம் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணி நடக்கிறது.

மேலும் கடந்த ஆண்டு மலர் கண்காட்சியில் இடம் பெற்று பார்வையாளகளை வெகுவாக கவர்ந்த டேலியா வகை மலர்களை இந்த ஆண்டு பெங்களூருவிலிருந்து வாங்காமல் ஐந்தருவியிலேயே வளர்த்து வருகின்றனர். அவை நன்றாக பூத்து குலுங்கி கண்களுக்கு விருந்தாக காட்சி அளிக்கின்றன.
Tags:
Privacy and cookie settings