குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மறைவுக்கு, முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:
தமிழக மண்ணின் அன்புக்குரிய தலைமகனும், பாரதரத்னா விருது பெற்றவரும், அனைவராலும் ஈர்க்கப்பட்ட மிகச்சிறந்த விஞ்ஞானியும், நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராகவும் விளங்கிய ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், திடீரென மறைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
சுதந்திர இந்தியாவில் மக்களால் கவரப்பட்ட நபர்களில் மிகச்சிறந்தவராக கலாம் விளங்கினார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் மிக மிக சாதாரணமான பின்னணியுடன், ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் அவர்.
தனது விடாமுயற்சி, கடினமான உழைப்பு, சிறந்த அறிவாற்றல் ஆகியவற்றின் மூலம் மிகப்பெரிய உயரத்தை அடைந்தார்.
இந்திய விண்வெளித் துறையிலும், அணு ஆயுதம், அணுசக்தித் திட்டங்களுக்கு அவரது அளப்பரிய பணி அனைவரும் அறிந்ததாகும்.
மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்ட விஞ்ஞானியாக விளங்கிய அப்துல் கலாம், விண்வெளி தொழில்நுட்பத்திலும், அதுதொடர்பான ஆய்வுத் துறையிலும் இந்தியாவை உலக அரங்கில் பெருமை கொள்ளத்தக்க இடத்துக்கு எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில், செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் ராக்கெட்டுகளை மேம்படுத்தும் குழுவின் தலைவராக விளங்கினார்.
இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்துக்கும் தலைமை வகித்து பணியாற்றியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஜெயலலிதா.
மிகச்சிறந்த வழிகாட்டி: இந்திய மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாக விளங்கியவர் கலாம்.
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும், மிகக் குறிப்பாக இளைஞர்களுக்காக தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்துள்ளார். இளைஞர்களின் மிகப்பெரிய ஆதர்ச நாயகனாகவும், இலட்சினையாகவும் விளங்கியவர்.
தனது எளிமையாலும், கருணையாலும் அனைவரையும் ஈர்த்தவர். மிகச்சிறப்பான தேச பற்றுக் கொண்டவராக விளங்கினார். அனைத்துக்கும் மேலாக நாட்டின் நலனில் அக்கறை செலுத்தியவர்.
தொழில்நுட்பத்தை அணிதிரண்டி அதன்மூலம், ஏழை-எளிய மக்களுக்கு எத்தகைய நன்மைகளை அளிக்க முடியும் என்ற சிந்தனையையே தனது வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தார்.
அவரது மறைவுக்கு இந்திய, தமிழக மக்களுடன் இணைந்து நானும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.