காயமடைந்த வர்களை கண்டு கொள்ளாத ஹேமமாலினி !

கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், முகத்தில் காயமடைந்த பாலிவுட் நடிகையும், பா.ஜ., - எம்.பி.,யுமான ஹேமமாலினி, 66, அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி கொஞ்சமும் விசாரிக்காதது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனவு கன்னி:

உ.பி.,யின் மதுரா லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருக்கும், பாலிவுட்டின் முன்னாள் கனவுக் கன்னி, தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஹேமமாலினி, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில்,

மதுராவிலிருந்து, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் நோக்கி, தனக்கு சொந்தமான, 'மெர்சிடஸ் பென்ஸ்' காரில் சென்றார். காரில், அவரின் உதவியாளரும் இருந்தார்.

காரை, மதுராவைச் சேர்ந்த ரமேஷ் சந்த் தாக்குர் என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். ஆக்ரா - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதியது.

காரில் இருந்த ஹனுமான் மகாஜன் என்பவரின், 4 வயது மகள், பூணம், சம்பவ இடத்திலேயே இறந்தாள். அவர் ஓட்டி வந்த காரில் இருந்த, மனைவி மற்றும் குழந்தைகள், நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.

அதுபோல, ஹேமமாலினியும் பலத்த காயமடைந்தார். அவரின் வலது கண் இமையில் பெரிய அளவில் வெட்டு ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர், ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நேற்று, இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் உடல் நலம் தேறி வருவதாகவும், அவரின் மூக்கு எலும்பு நொறுங்கி உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஹேமாவை, அவரின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஈஷா தியோல் மற்றும் நடிகர்கள் சந்தித்தனர். ராஜஸ்தான், பா.ஜ., முதல்வர் வசுந்தரா ராஜேவும் சந்தித்து ஆறுதல் கூறினார்.இந்த விபத்து குறித்து, ஹேமமாலினியின் கார் டிரைவர் தாக்குர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹேமமாலினியோ அல்லது அவரின் உதவியாளர்களோ, விபத்தில் இறந்த சிறுமி குறித்தோ, படுகாயமடைந்த பிறர் குறித்தோ விசாரிக்கவில்லை என, ஹனுமான் மகாஜன் நேற்று கவலை தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings