பெண்கள் சிறைகளில் சோதனை நடத்த வேண்டும்: ஐகோர்ட்டு

பெண்கள் சிறைகளில் கழிப்பறை வசதி போன்ற போதிய அடிப்படை வசதி இல்லை என்று கடந்த 2004-ம் ஆண்டு பத்திரிகையில் ஒரு செய்தி வெளியானது.


அதன் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு தானாக முன்வந்து பொதுநல வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு ஜூலை 16-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் டி.ஜி.பி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைப் படித்துப் பார்த்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கில் ஏற்கனவே கூறப்பட்டுள்ள குறைகளில் ஒரு பாகத்தை நிவர்த்தி செய்திருப்பதாக கூறியுள்ளனர். முற்றிலும் குறைபாடுகளை நீக்குவதற்கு 3 மாத கால அவகாசத்தையும் கேட்டுள்ளனர். அதை ஏற்கிறோம்.

3 மாதங்களுக்குப் பிறகு சட்டப்பணிகள் ஆய்வுக்குழுவின் உறுப்பினர் செயலாளர், சிறைக்குச் சென்று திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஜெயில், லாக் அப்-களின் நிலை குறித்த புகைப்படம் எடுக்கவேண்டும்.

அந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு உத்தரவிடப்படும். ஜெயில்கள், துணை சிறைகள், லாக் அப்களில் ஜெயில் விதிகள் புத்தகம் வைக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

போதுமான அளவில் அந்த புத்தகங்கள் வைக்கப்பட வேண்டும். ஜெயில் விதி புத்தகங்களை இணையதளத்திலும் இன்னும் 2 வாரத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அங்குள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் வாடகைக் கட்டிடங்களில் இயங்குவதாக கூறியுள்ளார். அங்கு அடிப்படை வசதிகள் இல்லை. எனவே இதை அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.

மேலும், அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிதான் புழல் ஜெயிலின் எல்லைக்கு உட்பட்ட அரசு ஆஸ்பத்திரி என்பதை அறிவிக்கும் நடவடிக்கைகளை வரும் நவம்பர் 19-ந் தேதிக்குள் முடிக்கவேண்டும். வழக்கு விசாரணை நவம்பர் 19-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings