போலி பாஸ்போர்ட்.. விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்த ஒருவர் கைது !

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் குறித்து உளவு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளிலும் மற்றும் சந்தேகப்படும் இடங்களிலும் போலீசாரின் தீவிர கண்காணிப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 20–ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தனிப்பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையில் இலங்கையை சேர்ந்த கிருஷ்ணகுமார், ராஜேந்திரன், சிவக்குமார் ஆகிய 3 பேர் காருடன் பிடிபட்டனர்.

அவர்களிடம் இருந்து ஜி.பி.எஸ். கருவிகள், இந்திய மற்றும் இலங்கை பணம், சயனைடு குப்பிகள், டிரைவிங் லைசென்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் கிருஷ்ணகுமார் திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகர் பகுதியில் பதுங்கி இருந்ததும், அங்கு அவர் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அவரது கூட்டாளிகளையும் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருச்சியில் இருந்து வெளிநாட்டிற்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் தப்பி செல்ல இருப்பதாக விமான நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பாஸ்போர்ட் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது விமான நிலைய பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்த விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்த ஒருவரின் விபரம் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அவர் தங்கியிருந்த வீட்டை போலீசார் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினார்கள். அப்போது போலி பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாடு தப்பிச்செல்ல அந்த நபர் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இன்று அந்த நபர் தங்கியிருந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த போலீசார் அங்கிருந்த 3 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு நடத்திய விசாரணையில் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த குமரகுரு என்றும், மற்ற 2 பேரும் அவருக்குரிய போலி பாஸ்போர்ட்டை தயார் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்ட நண்பர்கள் திருமுருகன், முகமது அலி என்றும் தெரிந்தது.

3 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்த குமரகுரு ஏன் திருச்சியில் தங்கினார், இங்கிருந்து சதி செயல்கள் ஏதாவது நடத்த திட்டமிட்டு இருந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
போலீசாரிடம் பிடிபட்டுள்ள குமரகுரு ஏற்கனவே இலங்கையில் நடந்த போரில் இரண்டு கால்களையும் இழந்தவர். தற்போது தமிழ்நாட்டில் கியூ பிரிவு போலீசார் விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கும் நபர்களை தேடி தொல்லை கொடுத்து வருவதாகவும்,

அதனால் அகதிகள்போல் வந்த தங்களுக்கு இங்கும் நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும், எனவே சுவிட்சர்லாந்து நாட்டுக்கு செல்ல முடிவு செய்து திருச்சியில் இருந்து இன்று விமானம் மூலம் செல்ல இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தங்களுக்கு எந்த தீவிரவாத அமைப்புடனும் தொடர்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் ஆரோக்கியதாஸ் என்ற போலியான பெயரில் பாஸ்போர்ட் எடுத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings