புதுக்கோட்டையில் அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்தது !

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பகுதி ஆலங்குளம். இந்த பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. சுமார் 300–க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்து வருகிறது.
6 பிளாக்குகளாக அமைந்துள்ள இந்த வீடுகளில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் குடியிருந்து வருகிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீடுகளில் குழந்தைகள், உள்பட அனைவரும் இருந்துள்ளனர்.

இந்த குடியிருப்பில் டி–4 பிளாக்கில் கீழ் வீட்டில் வசித்து வருபவர் லோகாம்மாள். இவர் ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பாண்டியன். டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இன்று காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த அவர்கள் 7.30 மணியளவில் வீட்டின் ஹாலில் அமர்ந்து டி.வி. பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டின் மேல்பகுதி திடீரென இடிந்து கீழே விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன், லோகாம்மாள் அந்த பகுதி மேலும் இடிந்து கீழே விழுவதை கண்டனர்.

உடனடியாக அவர்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு அலறியபடி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

இந்த நேரத்தில் டமார் என்ற பயங்கர சத்தத்துடன் மீதி மேல்பகுதியும் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த டி.வி., ஏ.சி., வாஷிங் மெஷின் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நசுங்கி சேதமானது.

இந்த சம்பவத்தில் மேல் வீட்டில் இருந்தவர்களும் விரைவாக கீழே இறங்கி ஓடி வந்தததால் அவர்களும் மயிரிழையில் உயிர் தப்பினர். இந்த தகவல் காட்டுத்தீ போல அப்பகுதி முழுவதும் பரவியது. இதை தொடர்ந்து சுமார் 1000–க்கும் மேற்பட்டோர் அங்கு கூடிவிட்டனர்.

ஆலங்குளத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அவைகள் இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பராமரிப்பு இல்லாததால் வீடுகள் ஒவ்வொன்றாக இடிந்து விழும் அபாய கட்டத்திலும் இருந்து வருவதாக அங்கு குடியிருந்தவர்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி அதிகாரிகளிடத்தில் தெரிவித்தனர். ஆனாலும், பராமரிப்பு இல்லாததால் இது போன்ற சம்பவங்கள் இனியும் தொடரும் என்று கூறினர்.
தாங்களும், தங்கள் குழந்தைகளும் உயிர் தப்பிக்க உடனடியாக இங்குள்ள வீடுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாரிய அலுவலகத்தில் புகார் செய்தனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் புதுக்கோட்டை டவுன் போலீசாரும் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings