அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வருவது போன்று சீனாவில் கத்தி கலாசாரம் வளர்ந்து வருகிறது. இங்கு பொது இடங்களில் மக்கள், கத்திக்குத்துக்கு ஆளாகிற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரெயில் நிலையம் ஒன்றில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், 31 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அங்கு ஷென்ஜென் நகரில் உள்ள சந்தையில் நேற்று 32 வயதான ஆசாமி ஒருவர் புகுந்து, அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார்.
அதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 12 பேர் கத்திக்குத்தில் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களது உடல்நிலை ஸ்திரமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
திருமண வாழ்வில் ஏற்பட்ட விரிசலின் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு, அதன் காரணமாகவே அந்த ஆசாமி கத்தியால் தாக்குதல் நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.