ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்ட 151 இசேவை மையங்கள் !

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும்,
 
கட்டணங்களை செலுத்தவும் இதர சேவைகளை பெறும் வகையில் சென்னை மாநகரத்தில் பத்து இடங்களில் 14 இ–சேவை மையங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 24.2.2014 அன்று துவக்கி வைத்தார். இதன் மூலம் இதுநாள் வரை சுமார் 52 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலமாக கரூர் மாவட்டம், புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் 3 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இ–சேவை மையத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

மேலும், தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 9 கோட்ட அலுவலகங்கள்; கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும்

வேலூர் ஆகிய மாநகராட்சிகளில் உள்ள 27 மண்டலம் மற்றும் கோட்ட அலுவலகங்கள்; கடலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 19 நகராட்சி அலுவலகங்கள்.

கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 44 ஊராட்சிமன்ற அலுவலகங்கள்;

ஆகிய இடங்களில் அமைந்துள்ள அலுவலகங்களில் மொத்தம் 2 கோடியே 96 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 99 இ–சேவை மையங்கள்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலமாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு இ-சேவை மையம் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 50 கோட்ட அலுவலகங்களில் 50 இ–சேவை மையங்கள்,

என ஒரு கோடியே 12 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 51 இ–சேவை மையங்கள்; என மொத்தம் 4 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 151 இ–சேவை மையங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைக்கப்பட்ட இம்மையங்களின் மூலம், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ் போன்ற வருவாய்த் துறையின் சான்றிதழ்களை வழங்கும் சேவைகளும்,

முதல்–அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்,

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம் போன்ற சமூகநலத் துறை திட்டங்கள் சார்ந்த சேவைகளும் வழங்கப்படும்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள இ–சேவை மையங்களில் சொத்துவரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இச்சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள் பெறவும், அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் வந்து செல்ல வேண்டிய சிரமம் குறைக்கப்படும்.

மேலும் இந்த இ–சேவை மையங்கள் மூலம் பல்வேறு அரசுத் துறைகளின் இதர சேவைகளையும் பொதுமக்கள் பெற்றிட ஏதுவாக தக்க விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வி. செந்தில் பாலாஜி, முக்கூர் என்.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன்,

தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் ராமச்சந்திரன், தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குநர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings