அலைகள் மோதும் கடலுக்கு நடுவே ஒரு அதிசய விமான நிலையம் அமைந்திருக்கிறது. அதுவும் நமது இந்தியாவில் தான் இப்படியொரு ஆச்சரிய விமான நிலையம். என்ன ஆச்சர்ய மாக இருக்கிறதா?
விமானம் தரை இறங்கச்சற்று நிமிடங்களுக்கு முன், விமானத்தில் இருந்து பார்த்தால், கடல் தான் தெரியும். முதன் முதலாகப் பார்ப்பவர்களுக்கு திகிலுடன் கூடிய ஆச்சரிய நிகழ்வாக இது தோன்றும் .
ஆனால், அடிக்கடி சென்று வருபவர்கள் மட்டும் கடலின் அழகை ரசிப்பார்கள். சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்திருக்கும் இந்த ரன்வே, லட்சத்தீவில் உள்ள அகட்டி (Agatti) விமான நிலையமாகும்.
அதிசயமான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று. அரேபியக் கடலில் இருக்கும் 36 தீவுகளைக் கொண்ட லட்சத்வீப், மத்திய அரசால் இயங்கும் சுற்றுலாத் தலம்.
கப்பல்களில் மட்டுமே செல்ல முடிந்த அகட்டி தீவில், 1987-ல் விமான நிலையம் கட்டத் தொடங்கி, 1988-ல் முடிவடைந்து, விமான சேவை தொடங்கியது.
விமானங்கள் இறங்க, 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட ரன்வேயின் நீளம், 1,204 மீட்டர்கள். அகலம், 360 மீட்டர்களே. பயணிகள் இங்கு இறங்கியதும், கப்பல்கள் மூலம் மற்ற தீவுகளுக்குச் செல்லலாம்.
சுற்றிலும் கடல் நீர் இருக்கும் இந்தத் தீவுக்கு, பெங்களூரு, கொச்சியில் இருந்து சிறிய வகை விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.