அமெரிக்காவின் டென்னிஸ் மாகாணத்தின் சாட்டனோகா நகரிலுள்ள இராணுவ சேவை மையத்தில் இன்று வெள்ளிக்கிழமை
ISIS ஆதரவாளர் ஒருவர் திடீரென நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 4 அமெரிக்கக் கப்பற் படையினர் உயிரிழந்துள்ளனர்.
உடனடியாக அமெரிக்க இராணுவத்தினர் திருப்பி நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் குவைத் நாட்டைச் சேர்ந்த
24 வயதுடைய ISIS ஆதரவாளரான முஹமது யூசுப் அப்துல் அஜீஸ் என்ற அந்நபரும் கொல்லப் பட்டுள்ளார்.
பொறியியல் படித்த குறித்த நபர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வந்தவர் என்பதுடன் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 1 மைல் தூரத்தில் தான் அவரது வீடும் அமைந்துள்ளது.
இவரது தாக்குதலின் நோக்கம் அறியப் படாத நிலையில் அவரது வீட்டில் இருந்த இரு பெண்கள் அதிரடிப் படையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரமடான் கொண்டாட்ட சமயத்தில் குறித்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப் பட்டிருப்பதால் நாடு முழுதும் அமெரிக்க மக்களை உஷாராக இருக்குமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக FBI தலைமையில் தீவிரவாதத் தடுப்புப் பிரிவும் உள்ளூர் ஏஜன்ஸிக்களும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளன.
இதேவேளை பிரான்ஸில் தென் பகுதியில் அமைந்துள்ள இராணுவத் தளம் மீது தாக்குதல் தொடுத்து இராணுவ அதிகாரிகளின் தலையைத் துண்டித்து
அதனை வீடியோப் பதிவு மூலம் சமூக வலைத் தளங்களில் வெளியிட தீவிரவாதிகள் திட்டமிட்ட சதி பிரெஞ்சு புலனாய்வுத் துறையால் முறியடிக்கப் பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இது தொடர்பான தகவல் கிடைத்ததும் 16 இலிருந்து 23 வயதுக்குள் இடைப்பட்ட 4 நபர்கள் திங்கட்கிழமை கைது செய்யப் பட்டதாகவும் தெரிய வருகின்றது.
ஐரோப்பாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரான்ஸில் ஜனவரியில் பாரிஸில் உள்ள சார்லி ஹெப்டோ நையாண்டிப் பத்திரிகை அலுவலகம் மீதும்
கோஷெர் அங்காடி மீதும் தீவிரவாதிகள் மேற்கொண்ட முற்றுகைச் சம்பவங்களில் 17 பேர் கொல்லப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.