சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா வழக்கில் 24–ந்தேதி விசாரணை

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரையும் பெங்களூர் ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம் 23–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் திருத்தம் செய்யப்பட்டு 11–ந்தேதி மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதுபோல தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதிலும் சுப்ரீம் கோர்ட்டு சுட்டிக் காட்டிய 9 பிழைகள் திருத்தப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த 2 மனுக்களும் கடந்த 16–ந்தேதி விசாரணைக்கு ஏற்கப்பட்டு எண் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய 6 நிறுவனங்கள் விடு விக்கப்பட்டதை எதிர்த்து அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்பது குறித்தும், சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் பரிசீலனை செய்து வந்தது.

இந்த நிலையில், மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கும் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை வருகிற 24–ந்தேதி தொடங்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings