ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி வாலிபர் பலி: 4 பேர் படுகாயம்

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள புதுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன்கள் கமலநாதன் (33), நரேஷ் (23). இதில் கமலநாதன் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நரேஷ் விவசாயம் செய்து வருகிறார்.
 
நேற்று இரவு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டைக்கு வந்து மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு ஊருக்கு புறப்பட்டனர்.

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள சென்னேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே சித்தூர் மாவட்டம் சத்தியவேடுவிலிருந்து நெல்விதை மூட்டைகளுடன் ஊத்துக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

அதன்பின் அங்கிருந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்ற ஆந்திர மாநிலம் வெங்கடகிரி பகுதியை சேர்ந்த சிவய்யா (28), மங்கம்மா (42), முனுசாமி (25) ஆகியோர் மீது லாரி மோதியது. பின்னர் டிரைவர் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

விபத்து குறித்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் படுகாயம் அடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் ஆட்டோவில் ஏற்றி சத்தியவேடுவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நரேஷ் இறந்தார்.

சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வராததை கண்டித்து படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சென்னேரியில் ஊத்துக்கோட்டை – சத்தியவேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் சத்தியவேடு போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சமரச பேச்சில் ஈடுபட்டனர்.
 
ஆம்புலன்ஸ் பழுதாகி மெக்கானிக் ஷெட்டில் உள்ளதால் சம்பவ இடத்துக்கு வர இயலவில்லை என்று போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுக்கு எடுத்து கூறினர். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

அதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். ஊத்துக்கோட்டை – சத்தியவேடு இடையே இரவு 7 முதல் 8 மணி வரை வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:
Privacy and cookie settings