நெய்வேலி: ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி நெய்வேலியில் என்.எல்.சி தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சென்னையில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர்பாக நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் கடந்த மாதம் 18ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸை நிர்வாகத்திடம் வழங்கினர்.
அதன் பின்னும் நடந்த நான்கு கட்டப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
அதன் பின்னும் நடந்த நான்கு கட்டப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
இதனையடுத்து நேற்றிரவு 10 மணி முதல் நிரந்தர தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை துவங்கினர். இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் 50 சதவீதம் பேர் பங்கேற்றுள்ளனர்.
வேலைநிறுத்தத்திற்கு சிஐடியூ, பாட்டாளி தொழிற்சங்கம் உட்பட 10 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பிரச்சனைக்கு தீர்வு காண சென்னையில் தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. வேலைநிறுத்தம் நீடித்தால் இரு நாட்களுக்கு பிறகு மின்உற்பத்தி மற்றும் நிலக்கரி வெட்டும் பணியில் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.