சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் மூலமாக ரூபாய் 80 ஆயிரத்தனை பொறியாளர் ஒருவர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி யுள்ளது.
நவீன வசதிகளுடன் கூடிய விலை உயர்ந்த டி.வி வெறும் ரூபாய் 80 ஆயிரம் விலையில் தருவதாக விளம்பரம் ஒன்று இன்டர்நெட்டில் வெளியிட்டு இருந்தனர்.
அந்த விளம்பரத்தை பார்த்து அதனை கிளிக் செய்த சென்னையை சேர்ந்த பொறியாளர் ஒருவர் ரூபாய் 80 ஆயிரத்தை பறிகொடுத்துள்ளார்.
சென்னை ஓட்டேரி காமராஜர் தெருவில் வசிப்பவர் பெலிக்ஸ் ஜெபமணி. கடந்த சில தினங்களுக்கு முன் இன்டர்நெட்டில் விளம்பரம் ஒன்றினைப் பார்த்து கிளிக் செய்துள்ளார்.
அதில் ரூபாய் 1.5 லட்சம் மதிப்பிலான நவீன வசதிகளுடன் கூடிய டி.வி வெறும் ரூபாய் 80 ஆயிரம் விலையில் தருவதாக கூறப்பட்டிருந்தது. மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண் குறிப்பிடப் பட்டிருந்தது.
அதில் பேசிய நபர் 2 வங்கி கணக்கு எண்களை தந்து அதில் பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். பணம் செலுத்திய உடன் விலை உயர்ந்த டி.வி வீடு தேடி வரும் என்று கூறினார்.
அவரும் உடனடியாக அந்த வங்கி கணக்குக்கு ரூபாய் 80 ஆயிரம் பணத்தை செலுத்தி யுள்ளார். ஆனால், பணம் அனுப்பிய பிறகும் வீட்டிற்கு டிவி வந்து சேரவில்லை.
இது குறித்த அவரது புகாரில், அந்த செல் நம்பருக்கு தொடர்பு கொண்ட போது போனை எடுத்த நபர்கள் இந்தி மொழியில் பேசி நாளை டி.வி வந்து விடும் எனக் கூறியுள்ளனர்.
ஆனாலும் அவர்கள் டி.வியை அனுப்பி வைக்கவில்லை. பின்னர் அந்த செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது. அந்த கும்பலிடம் இருந்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.