சன் டி.வி சொத்துகளை பறிமுதல் செய்ய 23-ம் தேதி வரை கோர்ட் தடை !

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு, சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கு, பணப் பரிவர்த்தனை மோசடி என பல வழக்குகள் சன் டி.வி. நிறுவனத்தின் மீது போடப்பட்டுள்ளன.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சன் டி.வி.யின் தலைமை அலுவலக இடம் உட்பட ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகள், வைப்பு நிதி ஆகியவற்றை அமலாக்கத் துறை முடக்குவதாக அறிவித்தது. இந்த சொத்து முடக்கத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சன் டி.வி. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியிருந்தது. இதனடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த சன் டிவி, தங்களது சொத்து முடக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை 2ஜி வழக்கை விசாரிக்கும் பெஞ்ச் மட்டுமே விசாரிக்காமல் இதர பெஞ்சுகளும் விசாரிக்கலாம் என்ற வாதத்தை முன்வைத்தது.

மேலும் ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகளை ஜூலை 10-ந் தேதியன்று கையகப்படுத்திக் கொள்ளப் போவதாக அமலாக்கப் பிரிவு அனுப்பிய நோட்டீஸுக்கும் தடை கேட்டிருந்தது சன் டி.வி. தரப்பு.

இந்த மனுக்களை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், சன் டி.வி. தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான 2ஜி வழக்கின் பெஞ்ச் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த மனு மீது வரும் இன்று விசாரணை நடத்தப்படும் (ஜூலை 13). இதனால் சன் டி.வி.யின் ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கப் பிரிவு தம் வசம் கையகப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது வரும் 23-ந் தேதியன்று சொத்து முடக்கத்தை எதிர்த்து சன் டி.வி. தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 2ஜி வழக்கை விசாரிக்கும் பெஞ்ச் முன்பு நடைபெறும்;

அதுவரை சன் டி.வி.யின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டாம் என்று அமலாக்கப் பிரிவுக்கு அறிவுறுத்துமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings