டாக்சி ஓட்டுநரை ஏமாற்றிய பெண்ணுக்கு தண்டனை !

டாக்சி டிரைவருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றிய பெண் அவர் டாக்சியில் பயணித்த அதே 48 கி.மீ தூரத்தை நடை பயணமாக சென்று கடக்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.  
டாக்சி ஓட்டுநரை ஏமாற்றிய பெண்ணுக்கு தண்டனை !
ஓஹியோ மாகாண நீதிமன்றமே இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் ஓஹியோ நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியதில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

அமெரிக்காவின் கிலெவ்லேண்டில் இருந்து பெயின்ஸ்வில்லே வரை விக்டோரியா பாஸம் என்ற பெண் டாக்சியில் சென்றுள்ளார். 

ஆனால் அவர் இறங்கும் இடம் வந்த பிறகு டாக்சி ஓட்டுநருக்கு பேசிய வாடகை தொகையை அளிக்காமலேயே சென்று விட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் போலீஸில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் விக்டோரியா குற்றம் செய்தது உறுதியானது. 

இதனையடுத்து நீதிபதி மைக்கேல் சிசோனெட்டி தீர்ப்பு வழங்கினார். 

செய்த குற்றத்துக்காக ஒன்று 60 நாட்கள் சிறையில் இருக்க வேண்டும் இல்லையெனில், 48 மணி நேரத்தில் 48 கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடக்க வேண்டும். 

அதாவது கிலெவ்லேண்டில் இருந்து பெயின்ஸ்வில்லே வரை உள்ள 48 கி.மீ தூரத்துக்கு நடக்க வேண்டும். குற்றவாளி விக்டோரியா இரண்டாவது தண்டனையை ஏற்றுக் கொண்டார்.

மேலும், அவர் ஏமாற்றிய டாக்சி ஓட்டுநர் பணி புரியும் யுனைடட் கேப் நிறுவனத்துக்கு 100$ வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் நீதி வழங்கிய நீதிபதி மைக்கேல் சிசோனெட்டி இதற்கு முன்னரும் இது போன்ற பல்வேறு விநோத தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். 

குடிபோதையில் கார் ஓட்டிய டிரைவர் ஒருவருக்கு கார் விபத்தில் சிதைந்த மனித உடல்களை பார்வையிடுமாறு தண்டனை வழங்கினார். 

இதேபோல், கடந்த 2002-ல் போலீஸ்காரரை பன்றி என அழைத்த நபருக்கு தெருவில் ஒரு பெரும் பன்றியுடன் நாள் முழுவதும் நிற்க வேண்டும். 

அதுவும், இந்தப் பன்றி போலீஸ் இல்லை என்ற பலகையை ஏந்தியபடி நிற்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Tags:
Privacy and cookie settings