10 அழகான இளைஞர்கள் 4 யுவதிகள்.. நட்புக்காக !

6 minute read
எனக்கு சகோதர சகோதரிகள் இல்லை. சிறிய வயதில் இருந்து நான் நண்பர்களிடையே ஒதுக்கப் பட்டிருந்தேன். அதனால் நான் அழகிய நண்பர்களுடன் பழக கைவீசி செலவழித்தேன். 
10 அழகான இளைஞர்கள் 4 யுவதிகள்.. நட்புக்காக !
கடைசியில் கையிலிருந்த பணம் நிறைவுற்றது. 
அதனால் வேறு வழியின்றி நண்பர்கள் பிரிந்து விடுவார்கள் என்ற பயத்தில் இந்த வேலையை செய்தேன்… 

உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கண் கலங்கியவாறு பொலிஸாருக்கு வாக்கு மூலமளித்தாள். உஷா 28 வயதான யுவதி. 

தந்தை முன்னாள் டிப்போ அதிகாரி. தாய் முன்னாள் சமுர்த்தி அத்தியட்சகர். வீட்டின் ஒரே பிள்ளை உஷா. பணக்காரக் குடும்பம். கூடவே அறிவும் இருந்தது. 

அறிவு, பணம், செல்வம் என அனைத்தையும் உஷாவுக்கு கொடுத்திருந்த கடவுள் நட்பை மட்டும் கொஞ்சம் தூரமாக்கி வைத்திருந்தார்.

யார் இந்த உஷா? ஏன் அவளைப் பற்றி இத்தனை பில்டப்? 

எதற்காக மேற்குறிப்பிட்ட வாக்கு மூலம் என கேள்விக் கணைகளை நீங்கள் தொடுப்பது புரிகின்றது.

ஆம் கடந்த ஒருவாரத்துக்கு முன்னர் பாணந்துறை பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சமன் ரத்னாயக்கவுக்கு ஒரு உளவுத் தகவல் கிடைக்கிறது.

“சேர் …. நல்ல கேஸ் ஒன்று இருக்கிறது…. வாகன விற்பனை தொடர்பானது ….. கண்டிப்பாக பெரிய அளவில் நடக்கிறது…
சில தகவல்கள் இப்போதைக்கு உள்ளன” என பாணந்துறை புலன் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சமன் ரத்னாயக்கவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஹொரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜனக நந்தனகே, ஹொரணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பத்ம குமார ஆகியோரின் வழிநடத்தலின் கீழேயே இந்த விசாரணைகள் ஆரம்பமாகின.

இது தொடர்பிலான விசாரணைகளுக்காக பொலிஸ் பரிசோதகர் தரிந்து ஹெட்டி ஆரச்சியின் கீழ் விசேட குழுவும் ஏற்படுத்தப்பட்டது.

அந்தக் குழுவில் பொலிஸ் பரிசோதகர் தரிந்துவை தவிர ஏனையோர் பாணந்துறை புலன் விசாரணைப் பிரிவிலிருந்தே தெரிவு செய்யப் பட்டிருந்தனர்.

பாணந்துறை புலன் விசாரணைப் பிரிவில் கடமையாற்றிய கான்ஸ்டபிள்களான சமிந்த (38049), ஜயசூரிய (69615), 

ஆரிய சிங்க (77842), மதுசங்க (88117), பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கமகே (1875) ஆகியோரே அந்த குழுவின் ஏனையோராவர்.
இந்நிலையில் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்றிருந்த புலன் தகவல்களை மையப்படுத்தி விசாரணைகள் ஆரம்பமானது.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றிருந்த தகவல்களுக்கு அமைவாக பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் பொல்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றை பொலிஸார் சுற்றிவளைத்தனர்.

அது சமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனப்படும் கராஜ் உரிமையாளர் ஒருவரின் வீடாகும். அந்த வீட்டை சுற்றிவளைத்த போது அங்கு அல்ட்ரோ ரக சொகுசு கார் ஒன்றும் இருந்தது. 

வீட்டை சுற்றிவளைத்த பொலிஸ் பரிசோதகர் ஹெட்டி ஆரச்சி தலைமையிலான குழு வீட்டிலிருந்த பெண் ஒருவரிடம் அந்த அல்ட்ரோ கார் தொடர்பில் விசாரணை செய்தது.

மோசடிக்கார பெண் விற்பனை செய்த கார், குறித்த வீட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்திருந்த தகவல்களுக்கு அமைவாகவே இந்த சுற்றிவளைப்பு இடம் பெற்றிருந்தது.

இந்த கார் யாருடையது? பொலிஸார் வீட்டுப் பெண்ணிடம் வினவினர். “சேர்……. இது ஹொரணையில் உள்ள மிஸ் ஒருவரிடம் வாங்கியது. குறைந்த விலையில் விற்பனை செய்ததால் கொள்வனவு செய்தோம்.
ஒரு இலட்சம் ரூபா முற்பணம் கொடுத்தே எடுத்து வந்தோம். அப்பெண் எல்லா ஆவணங்களையும் தயார் செய்து கொண்டுவருவதாக குறிப்பிட்டார்.

அதன் பின்னர் மிகுதி பணத்தை செலுத்த நாம் கதைத்துக் கொண்டோம்.” பொலிஸாரின் கேள்விக்கு மூச்சுவிடாது பதில் சொல்லி முடித்தாள் அவ் வீட்டுப் பெண்.

காரை விற்பனை செய்ததாக கூறும் பெண்ணை எப்படித் தெரியும்? எவ்வாறு நம்பி கொள்வனவு செய்தீர்கள்? 

அவர் எங்கிருந்து இந்த வர்த்தகத்தை மேற்கொள்கிறார்? என பொலிஸார் தொடர்ந்தும் துருவித் துருவி விசாரித்தனர்.

இதன் பலனாக ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் தான் வேலை செய்வதாகவும் அங்கு சேவையாளர்களின் தேவைக்காக வரி இன்றி கார் இறக்குமதி செய்யப் படுவதாகவும் 

அதனை குறைந்த விலையில் பெற்றுக் கொடுக்க முடியும் எனக் கூறியுமே வாடகைக்கு பெறப்பட்ட கார் ஒன்று இவர்களுக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளதை பொலிஸார் வெளிப்படுத்தினர்.

அப்போது தான் தாம் நன்றாக ஏமாற்றப் பட்டுள்ளதை அந்தப் பெண் உணர்ந்துள்ளார். 

இந்நிலையில் விசேட திட்டம் ஒன்றை வகுத்த விசாரணைக் குழுவினர் இந்த வாகன விற்பனையின் பிரதான சூத்திரதாரியான பெண்ணை கைது செய்ய திட்டம் வகுத்தனர்.

பொலிஸ் பரிசோதகர் தரிந்து ஹெட்டி ஆரச்சி தீட்டிய திட்டத்தின் பிரகாரம் ஒரு இலட்சம் ரூபா முற்பணம் செலுத்தி 

அல்ட்ரோ வாகனத்தை வாங்கிய பெண்ணை வைத்து விற்பனை செய்த பெண்ணுக்கு தொலைபேசியில் அழைக்கச் செய்தனர்.
அவ்வாறு தொலைபேசியில் அழைத்த பெண் உஷா…. நான் மிகுதிப் பணத்தையும் தயார் செய்து விட்டேன் என்ன செய்ய” என பொலிஸார் சொல்லிக் கொடுத்ததை அப்படியே வினவியுள்ளார்.

இதனையடுத்து ஹைப்ரிட் ரக கார் ஒன்றில் மிகுதிப் பணத்தை பெற உஷா வந்த போது அவரை பொலிஸார் கைது செய்தனர்.

அவர் செலுத்தி வந்த ஹைப்ரிட் ரக காரும் வாடகை அடிப்படையில் பெறப்பட்டது என்பதையும் பொலிஸார் வெளிப்படுத்திக் கொண்டனர்.

இதனையடுத்து உஷாவை ஹொரணை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்தனர். 28 வயதாகும் உஷா அவளது குடும்பத்தில் ஒரே பிள்ளை. 

அவள் தனது ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று உயர் சித்தியை பெற்றிருந்த நிலையில் 

கொழும்பில் உள்ள பிரசித்தமான பெண்கள் பாடசாலை யொன்றில் மேலதிக கல்வியை தொடர்ந்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக் கழகம் செல்லும் வரத்தையும் பெற்றுள்ள உஷா அங்கு முதற் தரத்தில் சித்தி செய்து பட்டம் பெற்றிருந்தாள்.
அதன்பின்னர் பிரசித்திபெற்ற பல்கலையின் மொழி தொடர்பிலான விரிவுரையாளராக இருந்துள்ள உஷா அக்காலப் பகுதியில் 

2013 ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தில் திட்டப் பணிப்பாளராக கடமையாற்றி யுள்ளார்.

ஆங்கில மொழி தொடர்பில் உஷாவுக்கு இருந்த பரிச்சயமும் ஆழ்ந்த அறிவும் பல்வேறு உயர் கல்லூரிகளில் அவரை பகுதி நேர விரிவுரையாளராகும் அளவுக்கு உயர்த்தியது. 

அதனை தொடர்ந்தும் உஷா ஆங்கிலம் கற்பிக்கும் வகுப்புக்களையும் நடத்தியுள்ளார்.

பணம் அறிவு என அனைத்தும் இருந்தும் உஷாவுக்கு ஒரு பிரச்சினை இருந்துள்ளது.

அதாவது அவளது பருமனான உடலும் அலங்கோலமான முகமும் அவளை நண்பர்கள் ஒதுக்கி வைக்கும் அல்லது பெரிதாக கணக்கெடுக்காது விடும் நிலையை ஏற்படுத்தியது.  

இது உஷாவை உள ரீதியாக பெரிதும் பாதித்துள்ளது.

இந்நிலையில் நண்பர்கள் தன்னை கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காக பணத்தை கொட்டிச் செலவழிக்கும் ஒரு யுக்தியை உஷா கையாண்டுள்ளார். 

அதனூடாக நண்பர்களை தன்னைச் சுற்றி வைத்துக் கொள்ள உஷா முயற்சித்துள்ளார்.

நண்பர்களை தனது செலவில் உல்லாச பிரயாணங்களுக்கு அழைத்துச் செல்லல், அவர்களுக்கு உணவு குடிபானம் பெற்றுக் கொடுத்தல் என பணத்தை வீசிச் செலவு செய்துள்ளார் உஷா.

இந்நிலையில் தாயின் இழப்பானது உஷாவை மேலும் கவலை கொள்ளச் செய்துள்ளது. 

இதனையடுத்து தனது நண்பர்கள் தன்னை விட்டுச் சென்று விடக் கூடாது என்பதற்காக உஷா மேலும் பல ஆயுதங்களை நண்பர்களுக்காக வீசியுள்ளார்.
சம்பாதிக்கும் பணம் நண்பர்களின் செலவுகளுக்கே சரியாகி விட பல சந்தர்ப்பங்களில் தனது தந்தையிடம் உஷா பணம் கேட்டு வற்புறுத்தி யுள்ளார்.

தனது ஒரே பிள்ளைக்காக எதையும் செய்யத் துணிந்த தந்தை ஒரு கட்டத்தில் தனது காணியையே விற்று கோடிக் கணக்கான ரூபாவை உஷாவுக்கு வழங்கியுள்ளார்.

இறுதியாக அவர்கள் வசித்த வீட்டைக் கூட அடமானம் வைத்து 2 1/2 கோடி ரூபாவை தந்தை மகளுக்கு கொடுத்துள்ளார்.

இப்படி தந்தை கொடுத்த பணத்தையெல்லாம் நண்பர்களுக்காகவே செலவழித்த உஷா ஒரு நண்பன் தொடர்பில் 

அவ்வப்போது கொடுத்துதவிய பணத்தொகை மட்டும் 70 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.

குறித்த நண்பர் அந்த பணம் ஊடாக வீடும் கட்டி வாகனமும் கொள்வனவு செய்துள்ளாராம். 

எனினும் நண்பர் வீடு கட்டி முன்னேறும் போது உஷாவுக்கோ அவரது சொந்த வீடு கூட சொந்த மில்லாமலேயே இருந்துள்ளது. 

உஷா பயணங்களுக்கும் வாடகை வாகனங்களையே பயன்படுத்த நேர்ந்தது. உஷா நண்பர்களுக்காக செய்தது அவை மட்டுமல்ல. 

நண்பர்களின் சந்தோஷத்துக்காக பத்தரமுல்ல ஒபேரா குழுவுக்கு மட்டும் உஷா சுமார் 60 இலட்சம் ரூபாவை செலவு செய்திருந்தார்.

இறுதியில் நண்பர்களுடன் அவர் கழித்த சொகுசு வாழ்வுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்படவே தனது தகைமைகளையும்

அறிவையும் மாற்று வழியில் பயன்படுத்த உஷா ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதனால் 2013 ஆம் ஆண்டு ஐ.நா.வின் இலங்கை அலுவலகத்திலிருந்து உஷா விலகியிருந்தாலும் தொடர்ந்தும் அங்கு வேலை செய்வது போன்று உஷா நடித்துள்ளதாக குறிப்பிடும் பொலிஸார் 

தனியார் வகுப்புக்களையும் ஏக காலத்தில் நடத்தி அங்கு வரும் பிள்ளைகளின் பெற்றோரை ஏமாற்றியே 

இந்த வாடகை கார்களை விற்பனை செய்யும் ஏமாற்று வேலையை உஷா செய்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

எனக்கு ஐ.நா.வுக்கு வரும் வாகனங்களை குறைந்த விலைக்கு எடுக்கலாம். ஒரு இலட்சம் கிலோமீட்டர் ஓடிய பின்னர் அக்கார்களை இன்று பெறலாம்.
20 இலட்சம் ரூபா காரை 9 இலட்சம் ரூபாவுக்கு பெற்றுத் தரலாம் எனக் கூறியே உஷா இந்த வாகன விற்பனை மோசடியை அரங்கேற்றிள்ளார்.

உஷாவுக்கு இருந்த சமூக அந்தஸ்தை வைத்து அவர் மீது சந்தேகம் கொள்ளாத மக்கள் உஷாவின் கதையை நம்பி 

அவசரமாக வாகனம் ஒன்றை வாங்கும் அவாவில் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இப்படி ஆசை காட்டியே 2000 ரூபா செலுத்தி பெற்ற அல்ட்ரோ காரையும் கராஜ் உரிமையாளர் சமனின் மனைவிக்கு உஷா விற்றுள்ளார். 

பிறகு ஆவணங்களை தந்து மிகுதி பணத்தை பெறுவதாக உறுதியளித்த பின்னே முற்கொடுப்பனவில் இந்த வர்த்தகம் இடம் பெற்றுள்ளது.

சமனின் மனைவியிடம் பெற்ற முற்பணத்தை நண்பர்களுக்காக செலவழித்து விட்டு அதில் ஒரு தொகையை செலுத்தி இரு வண்டிகளை வாடகைக்கு பெற்றுள்ளார் உஷா.

அவ்விரண்டு வண்டிகளையும் மகரகம மற்றும் புளத்சிங்கள பிரதேசங்களை சேர்ந்த இருவருக்கு 12 இலட்சம் ரூபா முற்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதில் ஒரு வாகனத்தின் பெறுமதி 20 இலட்சம் ரூபா என்பதுடன் இது தொடர்பில் அவர் 9 இலட்சம் ரூபாவினையே பெற்றுள்ளார்.

இந்நிலையில் தனது கள்ள வர்த்தகம் வெளியே தெரிந்துவிடாமலும் வாடகைக்கு வழங்கிய நிறுவனங்கள் வாகனத்தை தேடாமலும் 

இருக்க நாளாந்தம் அவற்றுக்கான வாடகைத் தொகையையும் செலுத்த உஷா தவறவில்லையாம்.
உஷா இவ்வளவும் செய்தது அவளது அழகான 10 தோழர்களும் 4 தோழிகளும் அவளை விட்டு சென்று விடக் கூடாது என்பதுடன் அவர்களை தன் பக்கம் வைத்திருப்பதற்காகும்.

எது எப்படி இருப்பினும் உஷா இறுதியாக கைது செய்யப்படும் போது அவளிடம் 2000 ரூபா மட்டுமே இருந்ததாக பொலிஸார் சுட்டிக் காட்டுகின்றனர்.

கைதாகும் போது அவர் வருகை தந்திருந்த ஹைப்ரிட் கார் 5000 ரூபா வீதம் செலுத்தி வாடகைக்கு பெறப்பட்டது என குறிப்பிடும் 

பொலிஸார் அதனையும் 35 இலட்சத்துக்கு விற்பனை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்துள்ளது.

எவ்வாறாயினும் ஒரு நாள் தான் சிக்குவேன் என்பதை அறிந்திருந்த உஷா இத்தாலிக்கு செல்லவும் ஆயத்தமாக விசாவையும் செய்து வைத்திருந்துள்ளார். 

இதனிடையே தான் அவர் பொலிஸ் வலையில் சிக்கியுள்ளார். உஷா பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தின் ஒரு பகுதியை இக்கட்டுரையின் ஆரம்பத்தில் தந்திருந்தோம். 

அதன் இன்னொரு பகுதி இதோ…..

உண்மையில் இந்த சிக்கலில் இருந்து விடுபட முடியாமல் நான் தவித்து வந்தேன். பின்னணியை தெரிந்து கொள்ள முடியாமல் பைத்தியக் காரியாய் அலைந்தேன்.
எனக்கு தூக்கம் கூட வரவில்லை. நீங்கள் என்னை கைது செய்து எனக்கு பாரிய உதவியை செய்துள்ளீர்கள். 

எனக்கு இப்போது தான் சுதந்திரமாக தூங்க முடியும் என கூறியவள் பொலிஸ் கூண்டுக்குள் நிம்மதியாக நித்திரைக்கும் சென்றுள்ளார்.

பின்னர் ஹொரணை நீதிமன்றில் ஆஜர்ப் படுத்தப்பட்ட உஷா விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளார்.
Tags:
Today | 27, March 2025
Privacy and cookie settings