தர்மபுரியை சேர்ந்தவர் செல்வவேல் (26). இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஆஸ்பத்திரியில் கருத்தடை அறுவை சிகிச்சை பிரிவில் பணி வழங்கப்பட்டு இருந்தது.
நேற்று இரவு 10 மணியளவில் ஜூன்ஸ் பேண்டு–டி சர்ட் அணிந்து வந்த செல்வவேல் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்தவர்களிடம் அவர் ரகளையில் ஈடுபட்டார்.
அப்போது பணியில் இருந்த டாக்டர் மற்றும் நர்சு உள்ளிட்ட பணியாளர்கள் பயிற்சி டாக்டர் செல்வவேலை சமாதானம் செய்தனர். ஆனாலும் அவர் தொடர்ந்து ரகளை செய்து கொண்டு இருந்தார்.
இதையடுத்து ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து செல்வவேலை சமாதானப் படுத்தினர்.
ஆனாலும் அவர் தொடர்ந்து அவர்களிடமும் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை குண்டு கட்டாக வெளியே தூக்கி வந்தனர். அப்போதும் அவர் ரகளை செய்தப்படி ஆஸ்பத்திரி முன்பு படுத்து கொண்டார்.
இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் போலீசார் அவரை கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் மீண்டும் எழுந்த பயிற்சி டாக்டர் செல்வவேல் போலீசாரை பார்த்து தகாத வார்த்தையில் பேசி இருக்கிறார்.
மேலும் பேண்ட்டையும் கழற்றி வீசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆஸ்பத்தி வளாகமே பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மீண்டும் அவரை சமாதானப் படுத்த முயன்றனர். ஆனாலும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து அவரை தூக்கி சென்று போதை தெளியவும், தூங்குவதற்கும் ஊசி போட்டனர். ஆனாலும் அவர் தூங்காமல் விடிய விடிய குடிபோதையில் ரகளை செய்தார்.
ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர் குடிபோதையில் ரகளை செய்ததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவரை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். அப்போது அவர் தொடர்ந்து ஏதோ பேசி கொண்டே இருந்தார்.
விடிய விடிய போராடியும் போலீசார் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று காலை வரை போதையில் இருந்த அவருக்கு போதை தெளிந்ததும் போலீசார் மீது பரபரப்பு புகார் செய்தார்.
அவர் கூறியதாவது:–
நான் எனது விடுமுறை நாளில் தான் குடித்தேன். பணியின் போது குடிக்க வில்லை. என்னை வலுகட்டாயமாக தூக்கி சென்று போலீசார் அடித்து விட்டனர். எனவே எனது பெற்றோர் வரவேண்டும்.
மேலும் என்னை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். பயிற்சி டாக்டர் குடிபோதையில் ரகளை செய்த தகவல் தெரியவந்ததும் ஆஸ்பத்திரி டீன் டாக்டர். எட்வின் ஜோ விரைந்து வந்தார்.
பின்னர் பயிற்சி டாக்டர் செல்வவேலிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.