தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் !

அன்னியச் செலாவணி முறைகேடு செய்ததாகத் தொடுத்த வழக்கில் குற்றவியல் நடவடிக்கைக்கு தடை கோரி, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு, விஜய் மல்லையாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.

முன்னதாக, அன்னியச் செலாவணி முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைகளை (சம்மன்), விஜய் மல்லையா வேண்டுமென்றே அவமதிப்பு செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க விசாரணை நீதிமன்றம் முடிவு செய்தது. 

அதற்கு தடை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், குற்றவியல் நடவடிக்கைகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்திருந்தார். 

திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். புகார் என்ன?: யுபி குழுமத் தலைவரான விஜய் மல்லையா, "கிங்ஃபிஷர் மது வகைகளை தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார்.

அந்த மதுபானத்தை விளம்பரப்படுத்த கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, லண்டனைச் சேர்ந்த நிறுவனத்திடம் விஜய் மல்லையா ஒப்பந்தம் செய்தபோது, அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (ஃபெரா) விதிகள் மீறப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

அதாவது, கிங்ஃபிஷர் மது வகைகளை வெளிநாடுகளில் பிரபலப்படுத்துவதற்காக லண்டனைச் சேர்ந்த "பெனட்டன் ஃபார்முலா என்ற நிறுவனத்துடன், கடந்த 1995-ஆம் ஆண்டில் விஜய் மல்லையா செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக அமலாக்கத் துறை அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டது.

லண்டனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த 1996, 97, 98 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட "ஃபார்முலா ஒன் என்ற உலக கார் பந்தயப் பட்டத்துக்கான போட்டிகளின்போது, கிங்ஃபிஷர் நிறுவனத்தின் விளம்பரச் சின்னத்தை பிரபலப்படுத்த அந்நிறுவனத்துக்கு 2 லட்சம் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.2 கோடி) விஜய் மல்லையா வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான பரிவர்த்தனைகளுக்கு, அன்னியச் செலாவணிச் சட்டத்தின்படி ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறையை விஜய் மல்லையா மீறியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
Tags:
Privacy and cookie settings