குடும்பத் தகராறில் 2 பெண் குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் வீசிக் கொன்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதே சமயம் இது கொலையா? தற்கொலையா என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
கோவை மதுக்கரையை சேர்ந்தவர் நவீன்குமார் (24). வேன் டிரைவர். தர்மபுரியை சேர்ந்தவர் எழிலரசி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் சூலூர் அருகே காங்கயம்பாளையம் நேரு நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு வர்ஷினி (4), தாரணிஸ்ரீ(1) என்ற இரண்டு பெண் குழந்தைகள். வர்ஷினி தனியார் பள்ளியில் பிரீகேஜி படித்து வந்தார்.
நவீன்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடும்ப செலவுக்கு பணம் தராததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு நவீன்குமார் வழக்கம்போல் குடித்து விட்டு வந்துள்ளார்.
இதனால் நவீன்குமாருக்கும், எழிலரசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் தூங்க சென்று விட்டனர். வீட்டில் படுத்து தூங்கிய எழிலரசி, குழந்தைகளைக் காலையில் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த நவீன்குமார் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள 10 அடி ஆழம், 7 அடி அகலம், 6 அடி நீளம் கொண்ட குடிதண்ணீர் தொட்டியில் எழிலரசி, 2 பெண் குழந்தைகள் சடலமாக கிடந்தனர். இதைப் பார்த்து நவீன்குமார் அதிர்ச்சி அடைந்தார். சூலூர் போலீசுக்குத் தகவல் தந்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறில் குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே 3 பேரின் சடலங்களும் கிடந்த தண்ணீர் தொட்டியின் இரும்பு மூடி மூடியே கிடந்தது. தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த எழிலரசி தொட்டியில் குதித்த பிறகு மூடியை எப்படி மூடிக் கொண்டிருக்க முடியும் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
10 அடி ஆழத் தொட்டியில் 10 அடிக்கும் தண்ணீர் இருந்தது. இதனால் தொட்டியில் குதித்த பிறகு தண்ணீர் தொட்டி மூடியை எழிலரசி மூடிக் கொண்டிருக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
ஒருவேளை குடும்பத் தகராறால் ஆத்திரம் அடைந்த நவீன்குமார் குழந்தைகள், மனைவியை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து நவீன்குமாரிடம் சூலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 ஆண்டுகள் முடியாத காரணத்தினால் கோவை ஆர்டிஓவும் விசாரணை நடத்தி வருகிறார்.