இணையம் மூலம் மட்டும் சாத்தியமாகக் கூடிய கதைகளில் இதுவும் ஒன்று; கொஞ்சம் விநோதமானது தான்; ஆனால் இணையத்துக்கே உரித்தானது.
அது என்ன என்று கேட்கிறீர்களா? உலகம் அறியாத வார்த்தை பற்றிய கதை இது.
அந்த வார்த்தைக்காக இணையதளம் ஒன்றை அமைத்திருக்கும் இளம் பெண் அதைத் தன்னைத் தவிர வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
ஆங்கில மொழியில் பலரும் அறிந்திராத பல வார்த்தை கள் இருக்கின்றன. ஆனால், யாருமே அறிந்திராத ஒரு ஆங்கில வார்த்தை இருப்பது சாத்தியமா?
அமெரிக்காவின் புரூக்ளின் நகரைச் சேர்ந்த ஜூலியா வெய்ஸ்ட் என்னும் இளம் பெண் இத்தகைய ஒரு வார்த்தையைக் கண்டு பிடித்திருக்கிறார்.
நியூயார்க் பொது நூலகத்தில் 17- ம் நூற்றாண்டு புத்தகம் ஒன்றை ஆய்வு செய்து கொண்டிருந்த போது அந்த வார்த்தையை அவர் கண்டறிந்திருக்கிறார்.
இரண்டு கயிறுகளால் பிணைக்கப் பட்டு ஒன்றிணைவது எனும் பொருளுக்காகப் பயன்படுத்தப்படும் அந்த வார்த்தை மாலுமிகள் மத்தியில் புழக்கத்தில் இருந்திருக்கிறது.
ஜூலியா வெய்ஸ்ட் இந்த அரிதினும் அரிதான சொல்லை உலகுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினார்.
அதற்காக என்றே ஒரு இணையதளம் அமைத்துள்ளார். இந்த வார்த்தை இடம் பெறும் பிரம்மாண்ட விளம்பரப் பலகையையும் அமைத்திருக்கிறார்.
ஆனால் இந்த வார்த்தையின் அரிதான தன்மை நீடிக்க வேண்டும் என நினைக்கும் அவர் தான் மட்டுமே அந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறார்.
அதனால் தான் அதை இணையத்தில் வேறு யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
அதனால் தான் அதை இணையத்தில் வேறு யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இது ஒரு பரிசோதனை தான். ஆனால், நடைமுறையில் இது சாத்தியமா என்று தெரியவில்லை என்றும் ஜூலியா கூறியிருக்கிறார்.
இணையத்தில் யாரேனும் இந்த வார்த்தையைப் பயன் படுத்தினால் அவர்களைத் தொடர்பு கொண்டு அதை அகற்றுமாறு கேட்டுக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
இங்கு நான் தனிமையில் இருக்கிறேன். இங்கு நாம் ஒன்றாக இருக்கிறோம் என்று தனது இணைய தளத்தில் அவர் கவித்துவமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இணைய தளத்துக்கு யாரேனும் வருகை தரும் போதெல்லாம் அவரது வீட்டில் விளக்கு எரிவதுபோல அவர் ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்த வகையில் இணைய வாசிகளுடன் அவர் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். எல்லாம் சரி, அது என்ன வார்த்தை என் கேட்கிறீர்களா?
http://work.deaccession.org/reach/
ஜுலியா கோரிக்கைக்கு மதிப்பளித்து நாமும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தாமல் விட்டு விடுகிறோம். (விளம்பரப் படத்தின் புகைப் படத்தில் அதைக் காணலாம்).
இன்னும் ஆர்வம் இருந்தால் அவரது இணைய தளத்துக்குச் செல்லலாம்: