தானேவில் குடியிருப்பு இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு !

மகாராஷ்டிராவின் தானே நகரில் ரயில்வே இருப்புப் பாதை அருகே உள்ள 50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 12 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தானே நகராட்சி மண்டல பேரிடர் மேலாண்மை பிரிவு பொறுப்பாளர் சந்தோஷ் காதம் கூறும்போது, “தானே நகரின் பி-கேபின் பகுதியில் இருக்கிறது கிருஷ்ண நிவாஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பு.

இதில் 4 தளங்கள் உள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இக்கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த 50 வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி உடனடியாக தொடங்கியது. 12-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிலர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையில், அதிகாலையில் பெய்த கனமழையால் மீட்புப் பணியில் சிறிது நேரம் சுணக்கம் ஏற்பட்டது. 

மழை நின்ற பின்னர் மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கின. மீட்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர். அஸ்வினி ஜோஷி மேற்பார்வையிட்டு வருகிறார்.

இந்த கட்டிடம் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை எனக் கூறி முனிசிபல் நிர்வாகம் பல முறை எச்சரிக்கை விடுத்திருந்தது” என்றார்.

கடந்த வாரம் மும்பை கல்யாண் பகுதியில் நடந்த கட்டிட விபத்தில் 9 பேர் பலியாகினர். அந்த கட்டிடமும் 40 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings