சசிபெருமாள் மரணம்: தமிழகத்தில் ஆக.4ல் முழு அடைப்புக்கு அழைப்பு!

1 minute read
காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழப்பை தொடர்ந்து தமிழகத்தில் வரும் 4ஆம் தேதி முழு அடைப்புக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
 
மது ஒழிப்புக்காக போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி நேற்று போராட்டம் நடத்தினார்.

5 மணி நேரத்திற்கு மேல் அவர் செல்போன் டவரில் இருந்ததால் ரத்தவாந்தி எடுத்து உயிரிழந்தார். சசிபெருமாளின் இந்த திடீர் மரணம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்நிலையில், காந்தியவாதி சசிபெருமாள் திடீர் மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 4ஆம் தேதி முழு அடைப்புக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா ஆகியோர்

கூட்டாக இந்த அழைப்பை விடுத்துள்ளனர். முழு அடைப்புக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஆகஸ்ட் 4ஆம் தேதி முழு அடைப்பிற்கு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம் ஆதரவு அளித்துள்ளன என்றார்.

டாஸ்டாக் மதுபான கடைகளால் தமிழ்நாடு நாசமாகிவிட்டது என்றும், சசிபெருமாள் உயிரிழப்புக்கு தமிழக அரசே காரணம் என்றும் வைகோ குற்றம்சாட்டினார்.
Tags:
Today | 18, April 2025
Privacy and cookie settings