கும்பகோணம் காவிரி ஆற்றில் குளித்த 4 மாணவர்களை தண்ணீர் அடித்து சென்றது தேடும்பணி தீவிரம்!

கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 4 மாணவ ர்களை தண்ணீர் அடித்து சென்றது.
அவர்களை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆற்றில் குளித்தனர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நீலத்தநல்லூர் ரோடு கணபதி நகரை சேர்ந்தவர் புகழேந்தி.

இவருடைய மகன் சஞ்சய்(வயது15). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி ஒன்றில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று காலை டியூசனுக்கு சென்றுவிட்டு நண்பர்களோடு சஞ்சய் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் அதில் குளிக்க சஞ்சய்க்கு ஆசை ஏற்பட்டது.

இதை நண்பர்களிடம் தெரிவித்தார். அதன்படி சஞ்சய் மற்றும் அவரது நண்பர்க ள் சகாஜிநாயக்கன் தெரு பகுதியில் உள்ள காவிரி ஆற்று படித்துறையில் இறங்கி ஒருவர் மீது ஒருவர் பந்தை தூக்கி போட்டு விளையாடி ஆனந்தமாக குளத்துக் கொண்டிருந்தனர்.

சஞ்சய்க்கு நீச்சல் தெரியாததால் ஆற்று நீர் திடீரென அவரை அடித்து சென்றது. உடனே அவரது நண்பர்கள் அபயக்குரல் எழுப்பினர். இதுகுறித்து கும்பகோணம் தீயணைப்பு நிலையத்துக்கும் சஞ்சய்யின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து காவிரி ஆற்றில் இறங்கி சஞ்சயை தேடினர். நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மற்றொரு சம்பவம் இதைப்போல நேற்று மாலை 3 மணியளவில் கும்பகோணத்தை அடுத்த மணஞ்சேரி என்ற இடத்தில் கொரநாட்டு கருப்பூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த இஸ்மத்பாட்சா மகன் யாசர்(14),

சையதுமுகமது மகன் முகமதுஹனிபா(14), முகமது மகன் சல்மான் (15) மற்றும் உஸ்மான் ஆகிய 4 பேரும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர்.

அவர்கள் அங்கிருந்த பழைய படுகை அணை சிமெண்ட் கட்டை அருகே குளித்துத்கொண்டிருந்த போது யாசர், முகமதுஹனிபா, சல்மான் ஆகிய 3 பேரை தண்ணீர் அடித்து சென்றது.

இதனால் கரையில் நின்று கொண்டிருந்த உஸ்மான் அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். தகவல் அறிந்த கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்புபடை வீரர்கள் 12 பேர் மணஞ்சேரி பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் தேடியும் மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தேடுதல் பணி தீவிரம் ஆற்றில் மூழ்கிய யாசர், முகமதுஹனிபா ஆகியோர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பும், சல்மான் 10–ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

மாணவர்கள் ஆற்றில் மூழ்கிய தகவல் அந்த பகுதியில் பரவியதால் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாரதிமோகன் எம்.பி., திருவிடைமருதூர் கோவி.செழயன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு தண்ணீரின் அளவை குறைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன்பேரில் காவிரி ஆற்றில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு அரசலாற்றில் திருப்பி விடப்பட்டது.

இதற்கிடையே நேற்று மாலை 6 மணியளவில் கும்பகோணம் பகுதியில் பலத்த மழை பெய்ததால் காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

அவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings