வலங்கைமான் அருகே ஓட ஓட விரட்டி வாலிபரை கொலை செய்த மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தாக்குதல்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. இவருடைய மகன் தினேஷ் (வயது25).
இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை 6 மணி அளவில் தினேஷ் விருப்பாட்சிபுரம் கடைவீதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு மர்மகும்பல் அரிவாள், உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் தினேஷை துரத்தியது. இதனால் அவர்களிடம் இருந்து தினேஷ் தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று மதிப்பு தெரு அருகே வைத்து சுற்றி வளைத்தது.
பின்னர் அந்த கும்பல் தினேஷை சரமாரியாக அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. இதனால் அலறித்துடித்த தினேஷ் மீண்டும் தப்பி ஓடி அருகே இருந்த காம்பவுண்டு சுவரில் ஏறி மாட்டு தொழுவத்தில் குதித்தார்.
அப்போதும் அவரை விடாமல் துரத்திய அந்த கும்பல் சுவர் ஏறி குதித்து தினேசை கழுத்து மற்றும் தலையில் கால்களால் மிதித்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதன்பின் சம்பவ இடத்தில் இருந்து அந்த மர்மகும்பல் தப்பி சென்று விட்டது.
வலைவீச்சு
இது குறித்து வலங்கைமான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி தினேஷின் உடலை கைப்பற்றி வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். தினேசுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த முன்விரோதத்தில் தினேஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.