கர்நாடகத்தில் மக்கள் ஹேப்பியாக உள்ளனர்.. குஷ்பு !

முதலமைச்சர் சித்தராமையா கர்நாடகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருவதால், மக்கள் சந்தோஷமாக வாழ்வதாகவும்,
 
தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியால் மக்கள் தங்களது சந்தோஷத்தை இழந்து விட்டதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு பெங்களூருவில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து குயின்ஸ் ரோட்டில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- 

மக்கள் சந்தோஷம்... 

மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பெங்களூருக்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய பிரசாரம் மூலம் மக்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.

நடிகையாக வரவில்லை... 

தேர்தல் பிரசாரத்தின் மூலம் பெங்களூர் மக்களை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் ஒரு நடிகையாக இங்கு வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக வந்துள்ளேன்.

தமிழர்களுக்கு முக்கியத்துவம்... 

மாநகராட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்கவில்லை என்று கேட்கிறீர்கள். காங்கிரசில் தான் தமிழர்களுக்கு முக்கிய பதவிகள், பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

11 தமிழர்கள்... 

மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 11 தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும். எத்தனை வார்டுகள் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது.

கர்நாடக மக்கள் ஹேப்பி... 

முதலமைச்சர் சித்தராமையா கர்நாடகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியால் மக்கள் தங்களது சந்தோஷத்தை இழந்து விட்டார்கள். 
மதுவால் சீரழியும் தமிழகம்... 

மது விற்பனையால் தமிழ்நாட்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் பள்ளி மாணவ- மாணவிகள் மதுவுக்கு அடிமையாகி விட்டனர். சீருடை அணிந்து கொண்டு மது வாங்கி குடிக்கும் மாணவிகளை பார்ப்பது வேதனை அளிக்கிறது.

சசிபெருமாள் மரணம்... 

அதனால் தான் தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த போராட்டத்தில் சசி பெருமாள் உயிர் இழந்துள்ளார். 

கர்நாடகத்தில் அது போன்ற நிலை இல்லை. மது விற்பனையில் கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே மது விற்பனையில் கர்நாடகத்தையும், தமிழகத்தையும் ஒப்பிட வேண்டியதில்லை.

காவிரி நதிநீர் பிரச்சினை... 

காவிரி நதிநீர் பிரச்சினை இன்று, நேற்று அல்ல, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது காவிரி பிரச்சினையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 

காவிரி பிரச்சினையால் தமிழ்நாட்டு விவசாயிகள் தான் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். காமராஜர் முதலமைச்சராக இருந்த போது, எந்த ஒரு பிரச்சினை எழுந்தாலும் உடனடியாக பேசி தீர்த்து விடுவார்.

பேச்சுவார்த்தை... 

ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா, காவிரி பிரச்சினை குறித்து கர்நாடக அரசுடன் பேசாமல் இருந்து வருகிறார். முதலமைச்சர் ஜெயலலிதா முன்வந்து கர்நாடக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினால், 

காவிரி பிரச்சினைக்கு மட்டும் அல்லாமல் இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

மோடியின் சுற்றுப்பயணம்... 

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் எந்த பலனும் இந்தியாவுக்கு கிடைக்கப்போவதில்லை' என இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings