டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் காவல் வெட்கக்கேடான விஷயம்.. விஜயகாந்த் !

முழு அடைப்பு போராட்டத்தில் கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, இன்று நடைபெறுகின்ற முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தேமுதிக முழு ஆதரவு அளித்துள்ளது. 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே தேமுதிக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அதிமுக அரசினுடைய காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கின்ற பெயரில், நேற்று இரவோடு இரவாக கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். 

ஜனநாயக ரீதியில், அகிம்சை வழியில் நடைபெறும் போராட்டங்களில் இதுபோன்ற அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, கைது செய்வதில்லை. போராட்டத்தில் ஈடுபடும்போது கைதுசெய்யப்படுவதே ஜனநாயக நெறியாகும்

ஆனால் அதிமுக அரசு போராட்டத்திற்கு முன்பே தேமுதிகவினர் மீதுள்ள அச்சம் காரணமாக முழுஅடைப்பு போராட்டம், மக்கள் போராட்டமாகமாறி வெற்றி பெற்றுவிடும் என்ற பயத்தின் காரணமாகவே கைது செய்துள்ளதாக கருதுகிறேன். 

அப்படி இல்லையெனும்பட்சத்தில் உடனடியாக அனைவரையும் அதிமுக அரசு விடுதலை செய்யவேண்டும். இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம், தேமுதிக ஒருபோதும் அஞ்சாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழக மக்களுக்கு பாதுகாப்பளிக்கவேண்டிய காவல்துறை, கேவலமாக டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு காவல் இருப்பது போன்ற வெட்கக்கேடான விஷயம் வேறேதுமில்லை.

டாஸ்மாக் மதுக்கடைகளை அதிகரித்துவிட்டு 500 மதுக்கடைகளை மூடிவிட்டோமென்றும், மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறதென்றும், அரசு சார்பில் பொய்யான தகவல்கள் நீதிமன்றங்களில் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் காவல்துறையோ மதுவினால் ஏற்படும் கொலை, கொள்ளை, அடிதடி, விபத்து போன்றவற்றை மறைத்து, நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை அளிப்பதாக தெரியவருகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும், வழிபாட்டு தலங்கள் அருகிலும், பள்ளிகளின் அருகிலும் இருக்கின்ற டாஸ்மாக் மதுக்கடைகளை அப்புறப்படுத்தவேண்டுமென நீதிமன்றம் அறிவுறுத்தியும்,

பொய்யான காரணங்களைக் கூறி நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை இந்த அதிமுக அரசு பொருட்படுத்தாமல், நீதிமன்றத்தையே ஏமாற்றும் போக்கில் செயல்படுகிறது. 

மேன்மைதாங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தமிழகத்தில் மது விலக்கிற்காக நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தையும், மக்கள் போராட்டத்தையும், 

அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகள் நடத்தும் போராட்டங்களையும் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்திருப்பீர்கள். 

எனவே தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதன் அவசியம் கருதி, தாங்களாகவே முன்வந்து, நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings