தயாநிதி மாறன் முன்ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த மாதம் 14-ம் தேதி (செப்டம்பர் 14) வரை தயாநிதி மாறனை
கைது செய்யவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும், தயாநிதி மாறன் மனு மீது இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, "தயாநிதி மாறனுக்கு எதிராக கடந்த 2013-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தது சிபிஐ. இந்த காலகட்டத்தில் பி.எஸ்.என்.எல்.
அதிகாரிகள் யாரேனும் கைது செய்யப்பட்டிருக்கின்றனரா? தயாநிதி மாறனை கைது செய்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ வலியுறுத்துவதற்கான காரணம் என்ன?
உத்தரப்பிரதேசத்தில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் நடந்த ஊழல் நினைவில் இருக்கும். ரூ.8,000 கோடி சுரண்டப்பட்டது.
இதுவரை ஒருவர்கூட கைது செய்யப்படவில்லையே? இந்த வழக்கை பொருத்த வரை குற்றஞ்சாட்டப்பட்டவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு இடமில்லை" என சிபிஐக்கு சரமாரி கேள்வி எழுப்பியது.
மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தயாநிதி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஆர். சுப்பையா, 6 வாரங்கள் இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை கடந்த திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், முன்ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் ஆகஸ்ட் 13-ம் தேதி மாலை 4.30 மணிக்குள் அவர் சிபிஐயிடம் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற சூழல் உருவானது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் நேற்று (செவ்வாய்கிழமை) மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் டி.எஸ். தாகுர், வி.கோபால கவுடா, ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் மாறனிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. எனவே, மாறன் இடைக்கால ஜாமீன் ரத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தயாநிதி மாறன் முன்ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.