சசிபெருமாள் மரணத்தில் மர்மம்: சேலத்தில் உறவினர்கள் மறியல்

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள இடங்கணசாலை பகுதியைச் சேர்ந்த காந்தியவாதியும், மதுவிலக்கு போராட்ட வீரருமான சசிபெருமாள் சாவில் மர்மம் உள்ளதாக கூறி, அவரது சொந்த ஊரில் உறவினர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள இடங்கணசாலை பகுதியைச் சேர்ந்தவர் சசிபெருமாள் (59). இவரது மனைவி மகிழம். இவர்களுக்கு ஹரி, நவநீதன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

கவியரசி என்ற மகள் உள்ளார். மூவருக்கும் திருமணமாகி விட்டது. சசிபெருமாள் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். சிறு வயதில் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

காந்தியவாதியான இவர் தீவிர மதுவிலக்கு பிரச்சாரம், உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு, தமிழகம் முழுவதும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே உண்ணாமலை பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டி, அலைபேசி டவர் மீது ஏறி அமர்ந்து சசிபெருமாள் போராட்டத்தில் ஈடுபட்டார்.

டவரில் இருந்த சசிபெருமாளை சமாதானம் செய்து, தீயணைப்பு துறையினர் மீட்டனர். அவரைக் கீழே கொண்டு வந்தபோது, உடலில் காயங்களுடன் இறந்திருந்தார்.

இந்த தகவலை அறிந்த அவரது உறவினர்கள் சசிபெருமாளின் சொந்த ஊரான சேலம் மாவட்டம், இடங்கணசாலை, கே.கே.நகர் ரோட்டில் திரண்டனர்.

சசிபெருமாளின் தம்பி செல்வம் தலைமையில் உறவினர்கள், திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்தியவாதி சசிபெருமாள் இறந்த சம்பவத்தில் மர்மம் உள்ளதாகவும், அவர் இறந்ததற்கான காரணம் தெரியாமல் அவரது உடலை வாங்க மாட்டோம் என்றும் கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து சசிபெருமாளின் உறவினர்கள் கூறும்போது, ‘‘கடந்த பல ஆண்டுகளாக சசிபெருமாள் தீவிர மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
 
ஆனால், அப்போதெல்லாம் அவருக்கு எதுவும் ஆகவில்லை. உடல் ஆரோக்கியத்துடன் இருந்த அவரது சாவில் மர்மம் உள்ளது.

இதுசம்பந்தமாக காவல் துறையினர் விசாரணை நடத்தி, அவர் சாவுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அதுவரை நாங்கள் அவரது உடலை வாங்கப்போவதில்லை என்றனர்.
Tags:
Privacy and cookie settings